கோலாலம்பூர்: 15ஆவது பொதுத் தேர்தல் (GE15) சனிக்கிழமை (நவம்பர் 19) நடைபெறவிருக்கிறது. இருப்பினும் சில தபால் வாக்காளர்கள், குறிப்பாக வெளிநாடுகளில் உள்ள மலேசியர்கள், தங்களுக்கு இன்னும் வாக்குச் சீட்டுகள் கிடைக்கவில்லை என்று கூறுகின்றனர்.
அவர்களில் சிலர் தங்களின் தபால் வாக்குச் சீட்டுகளை சனிக்கிழமையன்று (வாக்களிப்பு நாள்) மட்டுமே பெறுவார்கள் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
சமூக வலைதளமான ட்விட்டரில் பெர்னாமா நடத்திய சோதனைகள், கிட்டத்தட்ட ஒரு வாரத்திற்கு முன்பு தபால் வாக்காளர்களாகப் பதிவு செய்த வாக்காளர்கள் இருப்பதைக் கண்டறிந்தனர். ஆனால் இன்று வரை அவர்கள் வாக்குச் சீட்டுகளைப் பெறாததால் ஏமாற்றம் அடைந்தனர்.
டுவிட்டரில் எஸ்.பிரேம் குமார் தனது தபால் வாக்கின் நிலை குறித்து தேர்தல் ஆணையத்திடம் (EC) இருந்து எந்த தகவலும் வரவில்லை என்று கூறினார்.
போர்ட்டிக்சன் நாடாளுமன்றத் தொகுதியில் வாக்களிக்க இருக்கும் பிரேம், நான் இந்தியாவில் படித்துக் கொண்டிருக்கிறேன். தபால் வாக்காளராகப் பதிவு செய்துள்ளேன். ஆனால் வாக்குச் சீட்டுகள் கிடைக்கவில்லை.
“… இன்று வரை தேர்தல் ஆணையத்திடம் இருந்து எனக்கு எந்த புதுப்பிப்புகளும் செய்திகளும் வரவில்லை,” என்றும் அவர் கூறினார்.
நியூயார்க்கில் வசிக்கும் மற்றொரு ட்விட்டர் பயனரான ஐரா நூர் அரியானாவும் தனது வாக்குச் சீட்டுகளைப் பெறாததால் அதே இக்கட்டான நிலையில் இருப்பதாகத் தெரிகிறது.
தபால் வாக்குகள் அடங்கிய பொதுத் தேர்தலை தேர்தல் ஆணையம் நடத்துவது இது முதல் முறை அல்ல என்பதால், தபால் வாக்குச் சீட்டுகளைப் பெறுவதில் தாமதம் ஏற்படக் கூடாது என்றார்.
இதற்கிடையில், சவூதி அரேபியாவில் உள்ள சைபர் பாதுகாப்பு ஆலோசகரான சைபுதீன் அம்ரி, தனது தபால் வாக்குச் சீட்டுகள் நவம்பர் 19 ஆம் தேதி இரவு 8 மணிக்குள் (சவுதி அரேபியா நேரப்படி) வழங்கப்படும் என்று கூரியர் நிறுவனத்திடமிருந்து தனக்கு அறிவிப்பு வந்ததாகக் கூறினார்.
தேர்தல் முடிந்த பிறகுதான் வாக்குச் சீட்டுகளைப் பெறுவேன்… என்ன நகைச்சுவை, தேர்தல் ஆணையம். தபால் வாக்குகளைப் பயன்படுத்தாமல், வெளிநாட்டு தபால் வாக்காளர்கள் மலேசியத் தூதரகங்கள் அல்லது துணைத் தூதரகங்களில் வாக்களிக்க அனுமதிப்பதன் மூலம் தேர்தல் ஆணையம் இந்தப் பிரச்சினையைத் தீர்க்க வேண்டும் என்று நான் பரிந்துரைக்கிறேன். அது இன்னும் எளிதாக இருக்கும் இல்லையா? என்று அவர் சமூக ஊடகங்களில் கருத்து தெரிவித்தார்.
இந்த விவகாரம் தொடர்பான கேள்விகளுக்கு தேர்தல் ஆணையம் இன்னும் பதிலளிக்கவில்லை.