தாப்பாவை ம.இ.காவின் கோட்டையாக தக்கவைத்தார் சரவணன்; 5,064 வாக்கு பெரும்பான்மையில் வெற்றி

தாப்பா நாடாளுமன்றம் மற்றும் அதன் இரண்டு சட்டமன்றங்களுக்கான முடிவை பின்னிரவு மணி 1.30 க்கு அறிவித்தது தேர்தல் ஆணையம். நாடாளுமன்றம் மற்றும் இங்குள்ள இரண்டு சட்டமன்றங்களுமே தேசிய முன்னணி வசம் வெற்றியை கைப்பற்றின.

தாப்பா நாடாளுமன்றத்தில் 61,946 பேர் வாக்களிக்கும் தகுதியைப் பெற்றிருந்தனர். அதில், 44,481 பேர் தங்களின் வாக்குகளை செலுத்தினர். 36 ஆண்டுகாலம் ம.இ.கா வசம் வரலாற்றைக் கொண்டிருக்கும் தாப்பா நாடாளுமன்றத்தை 18,398 வாக்குகள் பெற்று ம.இ.கா வசமே மீண்டும் தக்க வைத்தார் டத்தோஸ்ரீ எம். சரவணன். கடந்த 14 ஆவது பொதுத் தேர்தலில் 614 பெரும்பான்மையில் வெற்றிபெற்ற வேளையில் இந்த 15 ஆவது பொதுத் தேர்தலில் 5,064 பெரும்பான்மையில் வெற்றியைத் தக்க வைத்தார்.

இங்குள்ள மெர்டேக்கா மண்டபத்தில் அதன் அறிவிப்பு மேற்கொள்ளப்பட்டது. தாப்பா நாடாளுமன்றத்தில் 6 முனைப்போட்டியாக 15 ஆவது பொதுத்தேர்தல் அமைந்தது. 4 ஆவது தவனையாக தேசிய முன்னணி சார்பாக ம.இ.கா தேசிய துணைத் தலைவர் டத்தோஸ்ரீ எம். சரவணன் மீண்டும் களமிறங்கி தனது வெற்றியை நிலைனாட்டினார்.

இம்முறை நம்பிக்கைக் கூட்டணியைப் பிரதிநிதித்து கெ அடிலான் கட்சியின் உதவித் தலைவரும் வழக்கறிஞருமான சரஸ்வதி கந்தசாமி போட்டியிட்டிருந்தார். அவருக்கு 13,334 வாக்குகள் கிடத்த வேளையில் தேசிய கூட்டணியிலிருந்து பெர்சாத்து கட்சியைச் சார்ந்து போட்டியிட்ட டத்தோ முஹம்மட் யாட்சின் 12,115 வாக்குகள் பெற்றார். இவ்வேளையில், வாரிசான் கட்சியிலிருந்து போட்டியிட்ட முஹம்மட் அக்பார் ஷேரிப்புக்கு 200 வாக்குகள் கிடைத்தன.

பெஜுவாங் கட்சியிலிருந்து போட்டியிட்ட மியோர் நோர் ஹைடிர் 335 வாக்குகள் பெற்ற நிலையில், சுயேட்சை வேட்பாளர்களாக கதிரவன் முருகன் 99 வாக்குகள் பெற்றார்.

தாப்பா நாடாளுமன்றத்திற்கு உட்பட்ட செண்டரியாங் சட்டமன்றத்தில் 7 முனைப் போட்டி இருந்தது. அதில் தேசிய முன்னணியைச் சார்ந்து போட்டியிட்ட சூங் சின் ஹெங் 8,406 வாக்குகள் பெற்று 2251 வாக்கு பெரும்பான்மையில் வெற்றிபெற்றார்.

இதே நாடாளுமன்றத்தின் ஆயர் கூனிங் சட்டமன்றத்தில் 5 முனைப் போட்டியாக இந்த தேர்தல் அமைந்த வேளையில், தேசிய முன்னணியின் ஹாஜி இஷாம் ஷாருடின் 9,088 வாக்குகள் பெற்று 2,213 பெரும்பான்மையில் வெற்றிபெற்றார்.

-ராமேஸ்வரி ராஜா

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here