உலகக் கோப்பை கால்பந்து: ஆஸ்திரேலியாவை வீழ்த்தி பிரான்ஸ் அபார வெற்றி

உலகக் கோப்பை கால்பந்து போட்டியின் ஒரு பகுதியாக புதன்கிழமை  நடைபெற்ற ஆட்டத்தில் ஆஸ்திரேலியாவை 4-1 என்ற கோல் கணக்கில் வீழ்த்தி வெற்றியுடன் தொடங்கியது நடப்பு சாம்பியன் பிரான்ஸ். மாஸ்கோவில் 2018-இல் நடைபெற்ற உலகக் கோப்பை போட்டியில் பிரான்ஸ் இரண்டாவது முறையாக சாம்பியன் பட்டத்தைக் கைப்பற்றியது.

இந்நிலையில் தனது பட்டத்தை தக்க வைத்துக் கொள்ளும் முயற்சியாக குரூப் டி பிரிவு தொடக்க ஆட்டத்தில் ஆஸ்திரேலியாவுடன் மோதியது. அல் ஜனோப் மைதானத்தில் நடைபெற்ற ஆட்டத்தில் ஆஸ்திரேலிய வீரர் கிரெய்க் குட்வின் 9-ஆவது நிமிஷத்திலேயே தனது அணிக்கு கோலடித்து பிரான்ஸுக்கு அதிர்ச்சி அளித்தார். இதைத்தொடர்ந்து சுதாரித்துக் கொண்ட உலக சாம்பியன் பிரான்ஸ் வீரர் தியோ அளித்த பாஸை பயன்படுத்தி 27-ஆவது நிமிஷத்தில் கோலடித்தார் மிட்பீல்டர் அட்ரியன் ரபியோட். அடுத்த சிறிது நேரத்திலேயே 32-ஆவது நிமிஷத்தில் அற்புதமாக கோலடித்தார் ஒலிவியர் ஜிரெளட். இதன் மூலம் 2-1 என முன்னிலை பெற்றது பிரான்ஸ்.

இரண்டாவது பாதி ஆட்டத்திலும் ஆஸ்திரேலிய அணியினர் கோல் போட மேற்கொண்ட முயற்சிகள் பலன் தரவில்லை. 68-ஆவது நிமிஷத்தில் உஸ்மான் டெம்ப்ளே  அனுப்பிய பந்தை தலையால் முட்டி அற்புதமாக கோலாக்கினார் இளம் நட்சத்திர வீரர் கிளியன் மாப்பே.  71-ஆவது நிமிஷத்தில் மாப்பே அனுப்பிய பாஸை பயன்படுத்தி தனது இரண்டாவது கோலடித்தார் ஜிரெளட். இதன் மூலம் 4-1 என்ற கோல் கணக்கில் அபார வெற்றி பெற்றது பிரான்ஸ். கரீம் பென்ஸமா, போக்பா போன்ற நட்சத்திர வீரர்கள் இல்லாத நிலையில் களமிறங்கியுள்ளது பிரான்ஸ்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here