நாட்டில் நிலவும் கடும் குளிர் அடுத்த ஆண்டு பிப்ரவரி மாதம் வரை நீடிக்கும் என நிபுணர்கள் தெரிவித்துள்ளனர். மலேசிய வானிலை ஆய்வுத் துறை (மெட்மலேசியா) துணை இயக்குநர் ஜெனரல் ஹிஷாம் முகமட் அனிப் கூறுகையில் கூடுதலான மழை மேகங்கள் இருக்கும்போது, சூரியனின் கதிர்களுக்கு கவசமாக அமைகின்றன. இதனால் ஆண்டின் மற்ற காலங்களுடன் ஒப்பிடும்போது வெப்பநிலை குறைவாக உள்ளது என்றார்.
டிசம்பர் மாதத்தில் பூமி சூரியனைச் சுற்றி வரும்போது சூரியனின் நிலை தெற்கு வளிமண்டலத்தில் வெகு தொலைவில் இருக்கும் என்றும் அவர் கூறினார். சூரியன் தெற்கே மாறும்போது வடக்கு அரைக்கோளத்தில் குளிர்காலம் ஏற்படும். இது பூமத்திய ரேகையில் உள்ள நாடுகளை பாதிக்கும் என தெரியவந்துள்ளது.
நாட்டின் பிற பகுதிகளை விட சமதளப் பகுதிகளான கிளந்தான், பகாங் மற்றும் பேராக் போன்ற பகுதிகள் குளிராக இருக்கும். 2014 ஆம் ஆண்டில், கோலா க்ராய், கிளந்தான் பகுதிகளில் வெப்பநிலை 17 ° C மற்றும் 18 ° C க்கு இடையில் பதிவு செய்யப்பட்டது. எனவே, மீண்டும் அந்த பகுதியில் அவ்வாறு நடக்க வாய்ப்புள்ளது என்றார்.
தெரெங்கானு மற்றும் கெடா போன்ற பல இடங்களிலும் குளிர்ச்சியான சூழ்நிலை நிலவும் என்று மலாயா பல்கலைக்கழக வானிலை ஆய்வாளர் அஜிசன் அபு சாமா தெரிவித்தார். இப்போது இரவில் மிகுந்த குளிர்ச்சியாகவும், ஆனால் பகலில் கடுமையான வெப்பமாகவும் இருக்கும். நவம்பர் தொடக்கம் முதல் சீனாவிலிருந்து வீசும் தரைக்காற்று அடுத்த ஆண்டு பிப்ரவரியில் முடிவடையும் என்று எதிர்பார்க்கப்படுகிறது, மேலும் வெப்பநிலை 22 டிகிரி செல்சியஸ் வரை வீழ்ச்சியடையக்கூடும் என்று அஜிசன் கூறினார்.