ஐரோப்பிய நாடுகளில் உள்ள உக்ரைன் தூதரகங்களில் விலங்குகளின் கண்கள் அடங்கிய பொட்டலங்கள் இருந்ததால் அதிர்ச்சி..!

கீவ், டிசம்பர் 3 :

உக்ரைன் மீதான ரஷியாவின் போர் 10 மாதங்களை கடந்தும் முடிவில்லாமல் நீண்டு வருகிறது. இந்த போரில் உக்ரைன் மற்றும் ரஷியா என இருதரப்பு இராணுவமும் பெரும் இழப்பை சந்தித்து வருகின்றன.

இந்த நிலையில் ஐரோப்பிய நாடுகளில் உள்ள பல உக்ரைன் நாட்டின் தூதரகங்கள் மற்றும் அலுவலகங்களுக்கு விலங்குகளின் கண்கள் அடங்கிய பொட்டலங்கள் அனுப்பட்டுள்ளது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

மாட்ரிட்டில் உள்ள உக்ரைன் தூதரகத்திற்கு நேற்று வெள்ளிக்கிழமை (டிசம்பர் 2) விலங்குகளின் கண்கள் அடங்கிய பொட்டலம் கிடைத்தது. ஆனால் அதில் வெடிக்கும் பொருள் எதுவும் இல்லை.இதனையடுத்து மாட்ரிட்டில் உள்ள உக்ரைன் தூதரகத்தை போலீசார் சுற்றி வளைத்தனர், மோப்ப நாய்களுடன் அந்த பகுதியை தேட ஆரம்பித்தனர்.

உக்ரைன் வெளியுறவு அமைச்சக செய்தித் தொடர்பாளர் ஒலெக் நிகோலென்கோ கூறியதாவது, ஒரு வினோத திரவத்தில் ஊறவைக்கப்பட்ட பார்சல்கள் ஹங்கேரி, நெதர்லாந்து, போலந்து, குரோஷியா மற்றும் இத்தாலி ஆகிய நாடுகளில் உள்ள உக்ரைன் தூதரகங்களுக்கு அனுப்பப்பட்டுள்ளன. மேலும், நேபிள்ஸ் மற்றும் கிராகோவில் உள்ள பொது தூதரகங்களுக்கும், ப்ர்னோவில் உள்ள தூதரகத்திற்கும் அனுப்பப்பட்டுள்ளன என்று கூறினார்.

இதனையடுத்து சம்பந்தப்பட்ட அனைத்து தூதரகங்கள் மற்றும் துணை தூதரகங்களை பலத்த பாதுகாப்புடன் இருக்க உக்ரைன் வெளியுறவு அமைச்சர் டிமிட்ரோ குலேபா, உத்தரவிட்டுள்ளார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here