உலகக் கோப்பை கால்பந்து: பிரேசில்-குரோஷியா அணிகள் கால்இறுதியில் இன்று மோதல்

22ஆவது உலகக் கோப்பை கால்பந்து போட்டி கத்தாரில் கடந்த மாதம் 20-ஆம் தேதி தொடங்கி கோலாகலமாக நடந்து வருகிறது. 32 அணிகள் பங்கேற்ற இந்த போட்டியில் லீக் மற்றும் 2ஆவது சுற்று (ரவுண்ட் 16) முடிவில் அதிக முறை சாம்பியனான பிரேசில், முன்னாள் சாம்பியன்களான அர்ஜென்டினா, இங்கிலாந்து, நடப்பு சாம்பியன் பிரான்ஸ், நெதர்லாந்து, மொராக்கோ, போர்ச்சுகல், குரோஷியா ஆகிய 8 அணிகள் கால்இறுதி சுற்றை எட்டின.

2 நாள் ஓய்வுக்கு பிறகு கால்இறுதி ஆட்டம் இன்று (வெள்ளிக்கிழமை) தொடங்குகிறது.  இரவு 8.30 மணிக்கு எஜூகேசன் சிட்டி ஸ்டேடியத்தில் நடைபெறும் முதலாவது கால்இறுதி ஆட்டத்தில் 5 முறை சாம்பியனும், நம்பர் ஒன் அணியுமான பிரேசில், தரவரிசையில் 12ஆவது இடத்தில் இருக்கும் குரோஷியாவை எதிர்கொள்கிறது.

பிரேசில் அணியில் காயத்தில் இருந்து மீண்டு கடந்த ஆட்டத்தில் ஆடிய நட்சத்திர வீரர் நெய்மார் நல்ல நிலையில் இருக்கிறார். முந்தைய ஆட்டத்தில் ஒரு கோல் அடித்த நெய்மார் இன்னும் ஒரு கோல் அடித்தால் சர்வதேச போட்டியில் பிரேசில் அணிக்காக அதிக கோல் அடித்தவரான ஜாம்பவான் பீலேவின் (92 ஆட்டங்களில் 77 கோல்) சாதனையை சமன் செய்வார்.

குரோஷிய அணியை பொறுத்தமட்டில் கேப்டன் லூகா மோட்ரிச், இவான் பெரிசிச், மார்சிலோ பிரஜோவிச் ஆகியோரின் தாக்குதல் ஆட்டத்தையே அதிகம் நம்பி இருக்கிறது. மற்றபடி அந்த அணியின் தற்காப்பு ஆட்டம் வலுமிக்கதாக காணப்படுகிறது.  மொத்தத்தில் அரைஇறுதிக்குள் அடியெடுத்து வைக்க இரு அணிகளும் கடுமையாக போராடும் என்பதால் இந்த ஆட்டத்தில் பரபரப்புக்கு பஞ்சம் இருக்காது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here