22ஆவது உலகக் கோப்பை கால்பந்து போட்டி கத்தாரில் நடந்து வருகிறது. இதில் நேற்றிரவு எஜூகேசன் சிட்டி மைதானத்தில் அரங்கேறிய முதலாவது கால்இறுதியில் 5 முறை சாம்பியனும், நம்பர் ஒன் அணியுமான பிரேசில், குரோஷியாவுடன் மோதியது. தொடக்கத்திலேயே கோல் அடித்து முன்னிலை பெறும் முனைப்புடன் இரு அணியினரும் விளையாடினர்.
ஆட்டத்தின் 105ஆவது நிமிடத்தில் பிரேசில் கோல் அடித்தது. அந்த அணியின் நட்சத்திர வீரர் நெய்மார் இந்த கோலை அடித்தார். ஆனால் வெற்றியை நெருங்கிய சமயத்தில் பிரேசில் கோட்டை விட்டது. 116ஆவது நிமிடத்தில் குரோஷியாவின் புருனோ பெட்கோவிச் கோல் போட்டு அணியை சமனுக்கு கொண்டு வந்தார். கூடுதல் நேரத்தின் முடிவில் ஆட்டம் 1-1 என்ற கணக்கில் சமநிலை ஆனதால் முடிவை அறிய பெனால்டி ஷூட்-அவுட் முறை கடைபிடிக்கப்பட்டது. பெனால்டி ஷூட்-அவுட்டில் குரோஷியா தனது முதல் 4 வாய்ப்புகளையும் கோலாக்கியது.
அதே சமயம் பிரேசில் 4 வாய்ப்புகளில் 2-ஐ வீணடித்தது. பரபரப்பான பெனால்டி ஷூட்-அவுட் முடிவில் குரோஷியா 4-2 என்ற கணக்கில் பிரேசிலை வீழ்த்தி தொடர்ந்து 2ஆவது முறையாக அரைஇறுதிக்குள் நுழைந்தது. கோப்பைபை வெல்லும் வாய்ப்பில் இருந்த 5 முறை சாம்பியனான பிரேசில் கால்இறுதியோடு வெளியேறியது. 2002-ம் ஆண்டுக்கு பிறகு அந்த அணி கோப்பையை வென்றதில்லை.