சென்னை: ‛‛உழைப்பாளர்களின் வளர்ச்சியே உண்மையான வளர்ச்சி” எனக்கூறி நடிகரும், தமிழக வெற்றிக் கழகத்தின் தலைவருமான விஜய் மே தின வாழ்த்து தெரிவித்துள்ளார். ஆண்டுதோறும் மே மாதம் 1ம் தேதி உழைப்பாளர் தினமாக கடைப்பிடிக்கப்பட்டு வருகிறது. உழைப்பாளர்களை நினைவுக்கூறவும், உலகெங்கிலும் உள்ள தொழிலாளர்களின் கடின உழைப்பு மற்றும் அர்ப்பணிப்பையும் அங்கீகரிப்பதும் தான் இந்த நாளின் நோக்கமாகும்.
அதன்படி இன்று உழைப்பாளர் தினம் கொண்டாடப்பட்டு வருகிறது. இந்நிலையில் தான் அரசியல் கட்சி தலைவர்கள் பலரும் உழைப்பாளர் தினத்தையொட்டி வாழ்த்து தெரிவித்துள்ளனர். அந்த வகையில் நடிகரும், தமிழக வெற்றிக் கழகத்தின் தலைவருமான நடிகர் விஜய் உழைப்பாளர் தின வாழ்த்தை தெரிவித்துள்ளார். இதுதொடர்பாக தமிழக வெற்றிக் கழகத்தின் அதிகாரப்பூர்வ எக்ஸ் பக்கத்தில், ‛‛ உழைப்பின் மேன்மையையும் உழைப்பாளர்களின் சிறப்பினையும் உலகிற்கு பறை சாற்றும் இந்த மே தினத்தில், தொழிலாளர் சகோதர சகோதரிகள் அனைவருக்கும் எனது உளமார்ந்த ‛‛மே தின” நல்வாழ்த்துகளை தெரிவித்து கொள்கிறேன்” என கூறியுள்ளார்.
மேலும் அந்த பதிவில் புகைப்படம் ஒன்று இணைக்கப்பட்டுள்ளது. அந்த புகைப்படத்தில் உழைப்பாளர்களை குறிக்கும் வகையிலான போட்டோ மற்றும், விஜயின் போட்டோ இடம்பெற்றுள்ளது. அதோடு மே 1ஆம் தேதி என பெரியதாக உள்ளது. அதோடு, உழைப்பாளர்களின் வளர்ச்சியே உண்மையான வளர்ச்சி என்பதை மனத்தில் கொண்டு, அவர்களுக்கான உரிமைகளை நிலைநாட்ட உறுதியேற்போம் என குறிப்பிடப்பட்டுள்ளது.
நடிகர் விஜயின் இந்த பதிவை தமிழக வெற்றி கழகத் தொண்டர்கள் கொண்டாடி வருகின்றனர். அவரது பதிவை எக்ஸ் பக்கத்தில் ரீபோஸ்ட் செய்து வருகின்றனர். மேலும் இந்த பதிவுக்கு கீழே நடிகர் விஜயின் போட்டோக்களை பதிவிட்டு மகிழ்ச்சியை வெளிப்படுத்தி வருகின்றனர்.
முன்னதாக முதல்வர் ஸ்டாலின் வெளியிட்ட உழைப்பாளர் தின வாழ்த்து செய்தியில், குருதியை வியர்வையாக்கி உழைப்பால் உலகை உயர்த்தும் அனைத்து உழைப்பாளர்களையும் உழைப்பாளர் தினத்தில் வாழ்த்திப் போற்றுவோம்! மேதினியில் வாழும் உழைப்பாளர்களின் உரிமைகளை பாதுகாக்க ஒற்றுமையை உண்டாக்க மே நாளில் உறுதியேற்போம். உழைக்கும் கைகள் ஒன்று சேர்ந்து புதிய உலகம் படைப்போம் என தெரிவித்துள்ளார்.




















