நிலச்சரிவு: சீன ஆரம்பப் பள்ளி ஆசிரியர்கள் மற்றும் மாணவர்கள் குறித்து கவலை

 

பத்தாங்கலியில் ஏற்பட்ட நிலச்சரிவால் பாதிக்கப்பட்டவர்களில் Mun Choong ஆரம்பப்பள்ளியின் ஆசிரியர்களும் மாணவர்களும் அடங்குவர் என்று கல்வி அமைச்சர் ஃபட்லினா சிடெக் தெரிவித்தார். இந்த குழு பயணம் தனிப்பட்ட விஜயம் என்று அவர் கூறினார்.

இது ஒரு குடும்பப் பயணமாகவோ அல்லது நண்பர்களிடையிலான பயணமாக இருந்திருக்கலாம். இருப்பினும் உறுதியாகத் தெரியவில்லை. அவர்களின் பயணம் தொடர்பான உண்மைகளை பெற முயற்சிக்கிறோம் என்று அவர் சுங்கை பூலோ மருத்துவமனையில் செய்தியாளர்களிடம் கூறினார். அங்கு பாதிக்கப்பட்டவர்களின் உடல்கள் பிரேத பரிசோதனைக்காக வைக்கப்பட்டுள்ளன.

கோலாலம்பூரில் உள்ள ஜாலான் ஈப்போவின் கம்போங் பத்துவில் உள்ள Mun Choong ஆரம்பப் பள்ளியின் பெற்றோர்-ஆசிரியர் சங்கம், பள்ளியின் சுமார் 20 ஆசிரியர்களும் அவர்களது குடும்ப உறுப்பினர்களும் நிலச்சரிவு ஏற்பட்ட ஆர்கானிக் பண்ணையில் முகாமிட்டுள்ளதாகத் தெரிவித்தனர். இச்சம்பவத்தில் மற்ற பள்ளிக் குழந்தைகள் பாதிக்கப்பட்டார்களா என்பதைக் கண்டறிய கல்வி அமைச்சகம் முயற்சித்து வருவதாக ஃபட்லினா கூறினார்.

ஆசிரியர்கள் மற்றும் மாணவர்கள் மற்றும் சம்பவத்தில் தொடர்புடைய உறவினர்களுக்கு நிதி உதவி மற்றும் உளவியல் சேவையை வழங்க அமைச்சகம் தயாராக இருப்பதாக அவர் கூறினார். பாதிக்கப்பட்டவர்களின்  தனியுரிமையை மதிக்க வேண்டும் என்றும் அவர் பொதுமக்களை வலியுறுத்தினார்.

அதிகாலை 2 மணியளவில் ஏற்பட்ட இந்த நிலச்சரிவில் இதுவரை 21 பேர் உயிரிழந்துள்ளனர், மேலும் 12 பேரைக் காணவில்லை, 61 பேர் காப்பாற்றப்பட்டனர்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here