சிங்கப்பூர்:
கடந்த டிசம்பர் 16 முதல் சிங்கப்பூர் நாட்டிலிருக்கும் சீனக் குடிமக்களிடம் மருந்துக்கான தேவை அதிகரித்ததை அடுத்து, சிங்கப்பூர் பனடோலின் விற்பனையை மட்டுப்படுத்தியுள்ளது.
சிங்கப்பூரின் தியோங் பாரு மாவட்டத்தில் உள்ள இரண்டு பெரிய மருந்தகங்கள் பொதுமக்களுக்கு மருந்துகள் விற்பனையை மட்டுப்படுத்துவதாக கணக்கெடுப்பின் முடிவுகள் கண்டறியப்பட்டுள்ளன.
வாட்சனின் மருந்தகத்தில், மாத்திரைகள் வழங்குவதைக் கட்டுப்படுத்துவதற்காக பனடோல் போன்ற மாத்திரைகளை காசாளர் கவுண்டர் மூலம் மட்டுமே விற்பனை செய்வதாகக் கூறப்படுகிறது.
இதற்கிடையில், கார்டியன் மருந்தகத்தில் நடத்தப்பட்ட ஒரு ஆய்வில், பனாடோலை அதிகபட்சமாக ஆறு பெட்டிகள் மட்டுமே வாங்க முடியும் என்ற அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது.
பனடோல் விற்பனையில் இவ்வாறான கட்டுப்பாடுகள் இருந்தபோதிலும், கிட்டத்தட்ட அனைத்து வகையான பனடோல்களும் நுகர்வோரால் வாங்கப்பட்ட பிறகு, மருந்தகங்களின் விற்பனை அலமாரிகளில் காலியாகவே காணப்பட்டன.
சிங்கப்பூரில் உள்ள மிகப்பெரிய பல்பொருள் அங்காடியான FairPrice, பனடோல் வாங்கும் அளவை நான்கு பெட்டிகளுக்கு மட்டுமே கட்டுப்படுத்தியுள்ளது.
இதற்கிடையில், சிங்கப்பூரில் பனடோலின் தேவை அதிகரிப்பு காரணமாக, மருந்து உற்பத்தியை அதிகரிக்க அந்நிறுவனம் கடுமையாக உழைக்க வேண்டியிருந்தது என்று பனடோல் சப்ளையரின் செய்தித் தொடர்பாளர் ஒருவர் கூறினார்.
சீனாவில் கோவிட்-19 தொற்று சம்பவங்களின் அதிகரிப்பு காரணமாக பனடோலின் தேவை கடுமையாக அதிகரித்துள்ளதை சிங்கப்பூர் சுகாதார அமைச்சகம் விளக்கியது.
ஏனென்றால், சிங்கப்பூரில் உள்ள பல சீனப் பிரஜைகள் தங்கள் குடும்ப உறுப்பினர்களுக்கு மருந்தை வாங்கி, கூரியர் நிறுவனங்களில் நீண்ட வரிசையில் நின்று தமது நாடுகளுக்கு அனுப்புவதையும் காண முடிவதாக, அந்நாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.
























