மலேசியாவின் தனித்துவமிக்க காலை சிற்றுண்டி வகைகள்

    பொதுவாக காலை சிற்றுண்டி ஒரு நாளில் மிக முக்கிய உணவாகக் கருதப்படுவதில்லை. ஆனால், ஆரோக்கியமான- நல்ல காலை சிற்றுண்டியை எடுத்துக் கொள்வதால் அன்றைய தினத்தில் எதிர்நோக்கப் போகும் சவால்களை எதிர்கொள்ள நாம் தயாராகிவிடுவோம்.    பல இன மக்கள் வாழும் மலேசியாவில் உணவு வகைகள் தனித்துவம் வாய்ந்தவை. அந்த வகையில் மலேசியாவில் காலை சிற்றுண்டிகளும் அனைத்துலக ரீதியில் புகழ்பெற்றவையாகும்.

நாசி லெமாக்

    மலேசியாவில் வாழும் அனைத்து இனத்தவர்களுக்கும் மிகவும் பிடித்த காலைச் சிற்றுண்டி ஒன்றாக நாசி லெமாக் கருதப்படுகின்றது.    தேங்காய்ப்பாலுடன் பொங்கிய சோற்றுடன் சம்பால், வெள்ளரிக்காய், அவித்த முட்டைகள், நெத்திலி, கச்சான் பொரியல் இணைக்கப்பட்டால் அது நாசி லெமாக்.    மலேசியாவில் இந்த காலைச் சிற்றுண்டியுடன் கோழி சம்பால் உள்ளிட்ட இதர சமையல் வகைகளும் இணைத்துச் சாப்பிடப்படுகின்றன.    2 ரிங்கிட் முதல் 20 ரிங்கட் வரை இந்த உணவு வகை அமைந்துள்ளது. குறிப்பாக, டாமன்சாரா அப் டவுனிலுள்ள நாசி லெமாக் கடை மக்கள் மத்தியில் மிகவும் புகழ் பெற்றது.

நாசி கெராபு

    நீல வண்ணத்தில் வித்தியாசமான முறையில் சமைக்கப்படும் சோறுடன் கோழிப் பொரியல், அவித்த முட்டை உள்ளிட்ட உணவுகளும் உடன் இணைக்கப்படுகின்றது.    இந்த நாசி கெராபு உணவு கிளாந்தானில் மிகவும் புகழ் பெற்ற காலைச் சிற்றுண்டியாகக் கருதப்படுகின்றது.    பாரம்பரிய உலாம் வகை உணவான இதனை பெட்டாலிங் ஜெயாவிலுள்ள கெசோம் காஃபேயில் வாங்கி ருசிக்கலாம்.    கிளாந்தானில் கோத்தாபாருவிலுள்ள கா மா நாசி கெராபு உணவகத்திலும் இந்த வகை உணவு மிகவும் பிரபலமானது.

தோசை

    இதுவும் மலேசியாவிலுள்ள பல இன மக்கள் மத்தியில் புகழ்பெற்ற காலை உணவுதான். இந்தியர்களின் பாரம்பரிய உணவான தோசை மலேசியாவில் அனைத்து இனத்தவரும் விரும்பி சாப்பிடக்கூடிய உணவாக உள்ளது.    பொதுவாக தோசையுடன் கோழிக்கறி, மீன் கறி, சாம்பார் உள்ளிட்ட கறிவகைகளும் தேங்காய், தக்காளி வகை சட்னிகளும் இணைத்து சாப்பிடுவர்.    நாடு தழுவிய அளவிலுள்ள இந்திய கடைகளில் பிரதான உணவுகளுள் ஒன்றாக தோசை உள்ளது.    குறிப்பாக, தலைநகர் பிரீக்பீல்ட்ஸில் உள்ள சேட் மசாலா உணவகத்தில் தோசை மிகவும் பிரபலம்.

காயா தோஸ்ட் – அரைவேக்காடு முட்டை, காப்பி

    இது நம் நாட்டின்  பழமையான காலைச் சிற்றுண்டிகளில் ஒன்றாகும். குறிப்பாக, காயா அல்லது வெண்ணெய் (பட்டர்) வாட்டிய ரொட்டியில் தடவி தருவர். அதோடு அரைவேக்காடு முட்டையும் காப்பியும்  இணைக்கப்பட்டு இந்த உணவை மேலும் மெருகூட்டும்.    நாடு தழுவிய அளவிலுள்ள காப்பி கடைகளில் இந்த உணவு வகைகளை வாங்கலாம்.    மேலும், 1928ஆம் ஆண்டு தோற்றுவிக்கப்பட்டு தலைநகரில்  மிக பழமையான காப்பி கடையாக விளங்கும் யூத் கீ கோப்பிதியாம், பினாங்கில் டிரான்ஸ்பர் ரோட் ரொட்டி பாக்கார் கடையில் இந்த வகை சிற்றுண்டி மிகவும் பிரபலமானது.

மீ / மீகூன் சுப்

இதுவும் நம் நாட்டில் மிகவும் புகழ் பெற்ற காலைச் சிற்றுண்டிகளில் ஒன்றாகும். மீ அல்லது மீகூன் சுப் வகை உணவாக சமைக்கப்பட்டு அதில் கோழி, ஃபீஸ் போல் போன்ற உணவுவகைகள் இணைக்கப்படும்.    இது தவிர, இறால், கணவாய் போன்ற உணவு பொருட்களும் இந்த உணவில் சேர்க்கப்படும்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here