ஓய்வு விடுதிகளில் தங்கியிருந்து இணைய மோசடியில் ஈடுபடும் 30 வெளிநாட்டினர் உட்பட 164 பேர் கைது!

லங்காவியில் உள்ள மூன்று விடுமுறை விடுதிகளில் மேற்கொண்ட நடவடிக்கையில், அங்கு தங்கியிருந்து இணைய மோசடியில் ஈடுபடுவதாக நம்பப்படும் 30 வெளிநாட்டவர்கள் மற்றும் 134 உள்ளூர்வாசிகள் உட்பட மொத்தம் 164 பேரை குடிநுழைவுத் துறை (JIM) கைது செய்துள்ளது.

உள்ளூர் சமூகத்தினர் அளித்த தகவலைத் தொடர்ந்து, புத்ராஜெயா உளவுத்துறை மற்றும் சிறப்பு நடவடிக்கைப் பிரிவினரால் நேற்று நண்பகல் நடந்த இந்த சோதனையின் போது, மொத்தம் 27 சீன பிரஜைகள், 2 தாய்லாந்து நாட்டவர்கள் , ஒரு மியன்மார் நாட்டவர் மற்றும் 18 முதல் 35 வயதுக்குட்பட்ட 134 மலேசியர்கள் கைது செய்யப்பட்டதாக குடிநுழைவுத் துறை தலைமை இயக்குநர், டத்தோ ஸ்ரீ கைருல் டிசைமி டாட் கூறினார்.

“ஆறு மாத உளவுத் தகவலின் விளைவாக, நடமாட்டக் கட்டுப்பாட்டு ஆணை (MCO) காலம் முடிவடைந்த பின்னரும், பொதுமக்களுக்கு திறக்கப்படாத ஓய்வு விடுதிகளில் செயல்படும் குறித்த கும்பலின் செயல்பாடுகளைகுடிநுழைவுத் துறை கண்டறிந்தது.

“சுமார் ஒரு வருடத்திற்கு முன்பு இருந்து செயல்படுவதாக நம்பப்படும் இந்தக் கும்பல், புதிய உறுப்பினர்களை ஆபரேட்டர்களாகப் பயிற்றுவிப்பதற்கான ஓய்வு விடுதிகளை செயல்பாட்டு மையங்களாக மாற்றியுள்ளது ,” என்று அவர் நேற்று செய்தியாளர்களிடம் கூறினார்.

“இந்தக் கும்பலின் செயல்பாட்டுச் செலவுகள் மாதச் சம்பளம், தங்குமிடம், வாடகை மற்றும் பல்வேறு வசதிகளை உள்ளடக்கிய மாதத்திற்கு RM800,000 என மதிப்பிடப்பட்டுள்ளது. மலேசிய சந்தேக நபர்களுக்கு மாதம் RM3,000 மற்றும் அவர்கள் ஆட்சேர்ப்பு செய்த ஒவ்வொரு நபருக்கும் RM15 கமிஷன் வழங்கப்படுவதும் விசாரணையில் கண்டறியப்பட்டது,” என்று அவர் கூறினார்.

கைது செய்யப்பட்டவர்களிடமிருந்து 17 சீன கடவுச்சீட்டுகள் தவிர, 756 கைத்தொலைபேசிகள், 150 யூனிட் கணினிகள் மற்றும் மடிக்கணினிகள் மற்றும் கும்பல் மோசடி நடவடிக்கைகளை மேற்கொள்ள பயன்படுத்திய பல்வேறு மின்னணு உபகரணங்களையும் தாங்கள் பறிமுதல் செய்ததாக கைருல் டிசைமி கூறினார்.

17 பேர் தவிர மீதமுள்ள வெளிநாட்டவர்களிடம் செல்லுபடியாகும் பயண ஆவணங்கள் இல்லை என்றும் அவர் கூறினார்.

சோதனையின் போது தடுத்து வைக்கப்பட்டுள்ள அனைத்து சீன பிரஜைகளும் குடிவரவு சட்டம் 1959/63 மற்றும் பாஸ்போர்ட் சட்டம் 1966 ஆகியவற்றின் கீழ் விசாரிக்கப்பட்டு வருவதாகவும், மேலும் மலேசிய சந்தேக நபர்கள் மேலதிக விசாரணைக்காக தடுத்து வைக்கப்பட்டுள்ளதாகவும், இந்த வழக்கில் தொடர்புடைய மூன்று ரிசார்ட்டுகளின் உரிமையாளர்களையும் குடிநுழைவுத் துறை விசாரிக்கும் என்றும் அவர் மேலும் கூறினார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here