கோலாலம்பூர்: அம்னோ தலைவர் அஹ்மட் ஜாஹிட் ஹமிடி, கட்சி தனது முதல் இரண்டு பதவிகளுக்கான போட்டி இல்லா தீர்மானத்தை சங்கப் பதிவாளரிடம் (RoS) திருப்திகரமாக விளக்க முடியும் என்று நம்புகிறார். இந்த விஷயத்தில் கட்சிக்கு 60 நாட்கள் அவகாசம் இருப்பதாக அவர் கூறினார்.
இன்று நாடாளுமன்றத்தில் செய்தியாளர்களிடம் பேசிய அவர், “நாங்கள் நேர்மறையான பதிலைப் பெறுவோம் என்று நான் நம்புகிறேன். தலைவர் மற்றும் துணைத் தலைவர் பதவிகளுக்கான எந்தவொரு போட்டியையும் தடுக்கும் கட்சியின் முடிவைப் பற்றிய ஆவணங்களுடன், ஜனவரி 31 அன்று அம்னோ அதிகாரிகள் RoS தலைமை இயக்குநர் நவார்டி சாத்தை சந்தித்தனர்.
கட்சியின் அரசியலமைப்பில் சாத்தியமான மீறல் குற்றச்சாட்டுகளை ஜாஹிட் நிராகரித்தார். கட்சி அரசியலமைப்பில் உள்ள பல்வேறு விதிகளை RoS க்கு விளக்கியுள்ளது என்று கூறினார். பொதுச் சபை அம்னோவின் மிக உயர்ந்த அதிகாரமாக இருப்பதால், போட்டி இல்லா தீர்மானம் ஒரு பிரச்சினை அல்ல என்றார்.
கடந்த வாரம், கட்சியின் சமீபத்திய பொதுச் சபையில் அங்கீகரிக்கப்பட்ட பிரேரணையின் மீது விரிவான விளக்கம் அளிக்க அம்னோவுக்கு 60 நாட்கள் அவகாசம் அளித்தது. இரண்டு அம்னோ உறுப்பினர்கள் மூன்று வாரங்களுக்கு முன்பு, கட்சியின் அரசியலமைப்பு மீறல் குறித்து விசாரணை கோரி RoS-க்கு அறிக்கை அளித்தனர்.
பொதுச் சபையில் பிரேரணை தாக்கல் செய்யப்பட்டது கட்சியின் அரசியலமைப்பின் 10ஆவது பிரிவை மீறியதாக அவர்கள் கூறினர். பொதுச் சபைக்கு இரண்டு வாரங்களுக்கு முன்னதாகவோ அல்லது உச்ச கவுன்சில் தாக்கல் செய்தால் ஏழு நாட்களுக்கு முன்பாகவோ தாக்கல் செய்ய வேண்டும் என்றும் அவர்கள் வலியுறுத்தினர்.
முதல் இரண்டு பதவிகளுக்கு போட்டியிட வேண்டுமா என்பதில் அம்னோ பிளவுபட்டதாக கூறப்படுகிறது. சிலர் இது கட்சியை பிளவுபடுத்தும் அபாயம் இருப்பதாகவும் மற்றவர்கள் ஜாஹிட் மற்றும் அவரது துணை முகமட் ஹசானுக்கும் அடித்தட்டு மக்களின் ஆதரவு இருப்பதை நிரூபிக்க வேண்டும் என்று வாதிடுகின்றனர்.








