சீன இராணுவத்தின் நவீன மயமாக்கலுக்கு ஆதரவாக செயல்பட்ட 6 சீன நிறுவனங்களுக்கு அமெரிக்காவில் தடை

சீன இராணுவத்தின் நவீன மயமாக்கலுக்கு ஆதரவாக செயல்பட்ட 6 சீன நிறுவனங்களுக்கு அமெரிக்காவில் புதிய தடை விதிக்கப்பட்டு உள்ளது.

அமெரிக்காவின் வான்பரப்பில் அத்துமீறி சீனாவின் உளவு பலூன் பறந்த விவகாரம் கடந்த வாரத்தில் பரபரப்புடன் பேசப்பட்டது. எனினும், அது ஆராய்ச்சிக்காக அனுப்பிய பலூன் என்றும் தவறுதலாக அமெரிக்க வான்பரப்புக்குள் நுழைந்துள்ளது என்றும் சீனா கூறியது.

எனினும், இதனை உளவு பலூன் என்றே அமெரிக்கா கூறி வருகிறது. தொடர்ந்து அதனை சுட்டு வீழ்த்தியது. அதன் பாகங்களை கைப்பற்றி ஆய்வும் செய்து வருகிறது.

தொடர்ந்து 2-வது முறையாக அத்துமீறிய மர்ம பொருளையும் அமெரிக்கா சுட்டு வீழ்த்தியது. உலகம் முழுவதுமுள்ள 40-க்கும் மேற்பட்ட நாடுகளின் வான்பரப்பில் அத்துமீறி இதுபோன்ற உளவு பலூன்களை பறக்கவிடும் திட்டத்தில் சீனா ஈடுபட்டு வருகிறது என்றும் சீனா மீது அமெரிக்கா குற்றச்சாட்டை சுமத்தியது.

ஆனால் அமெரிக்காவின் இந்த செயல் சீனாவுடனான உறவை பாதிப்பிற்குள்ளாக்கி இருக்கிறது என்றே சீனா பதிலாக தெரிவித்தது.

இந்நிலையில், தி நியூயார்க் டைம்ஸ் செய்தி நிறுவனம் வெளியிட்டு உள்ள செய்தியில், சீன இராணுவத்தின் நவீன மயமாக்கலுக்கு ஆதரவாக பல சீன நிறுவனங்கள் செயல்பட்டு வருகின்றன. இதனை முன்னிட்டு அமெரிக்க அதிபர் பைடனின் அரசாங்கம் அதுபோன்ற 6 சீன நிறுவனங்களுக்கு புதிய தடைகளை விதித்து உள்ளார்.

அமெரிக்க வான்பரப்பில் சீன உளவு பலூன் பறந்ததற்கு எதிர்வினையாற்றும் ஒரு பகுதியாக இந்நடவடிக்கை எடுக்கப்பட்டு உள்ளது என தெரிவித்து உள்ளது.

இதன்படி, 5 சீன நிறுவனங்கள் மற்றும் ஒரு ஆய்வு மையம் என மொத்தம் 6 சீன நிறுவனங்களை அமெரிக்க வர்த்தக துறை தடைப் பட்டியலில் சேர்த்து உள்ளது.

இதனால், சிறப்பு உரிமம் இன்றி அமெரிக்காவின் பொருட்கள் மற்றும் தொழில் நுட்பங்களை சீன நிறுவனங்களுக்கு விற்பனை செய்வது தடுக்கப்படும்.

இந்த 6 சீன நிறுவனங்களும், உளவு பணிகளுக்கான விண் கப்பல்கள் மற்றும் உளவு பலூன்களுடன் தொடர்புடைய சீனாவின் இராணுவ திட்டங்களுக்கு ஆதரவாக செயல்பட்டு உள்ளது என அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here