ஓட்டுநர் உரிமம் இல்லாத வெளிநாட்டவர்களை உங்கள் வாகனங்களை ஓட்ட அனுமதிக்காதீர் – சாலைப் போக்குவரத்துத் துறை

ஓட்டுநர் உரிமம் இல்லாத வெளிநாட்டினரை தங்கள் வாகனங்களை ஓட்ட அனுமதிக்கும் உள்ளூர்வாசிகள் மீது, கிளாந்தான் சாலைப் போக்குவரத்துத் துறை கடுமையான நடவடிக்கை எடுக்கும் என்று, கிளாந்தான் சாலைப் போக்குவரத்துத் துறை இயக்குனர், முகமட் மிசுவாரி அப்துல்லா தெரிவித்தார்.

இந்த விஷயத்தை தமது துறை தீவிரமாகக் கருதுகிறது, இதனைக் கட்டுப்படுத்த உறுதியான நடவடிக்கை எடுக்கப்படாவிட்டால், இது பின்னர் கட்டுப்படுத்த முடியாததாக மாற வாய்ப்புள்ளது என்று அவர் கூறினார்.

இவ்வாறு ஓட்டுநர் உரிமம் இல்லாமல் வாகனம் ஓட்டும் வெளிநாட்டவர்கள் மீது நடவடிக்கை எடுப்பது மட்டுமல்லாமல், வாகனங்களையும் நாம் பறிமுதல் செய்வோம், மேலும் உரிமையாளர்கள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் என்று அவர் மேலும் கூறினார்.

கிளாந்தனில் ஓட்டுநர் உரிமம் இல்லாமல் வாகனம் ஓட்டி பிடிபட்ட வெளிநாட்டவர்களில் பெரும்பாலானவர்கள் ரோஹிங்கியாக்கள் என்று முகமட் மிசுவாரி கூறினார்.

“ஐக்கிய நாடுகளின் அகதிகளுக்கான உயர் ஆணையர் (UNHCR) அட்டை அவர்கள் வாகனம் ஓட்டுவதற்கான உரிமம் அல்ல. செல்லுபடியாகும் பயண ஆவணங்கள் அற்ற சட்டவிரோத குடியேற்றவாசிகள்மற்றும் ஓட்டுநர் உரிமம் இல்லாத வெளிநாட்டினருக்கு தங்கள் வாகனங்களை கடனாக வழங்குவதோ அல்லது விற்பனை செய்வதோ குற்றமாகும் என்று அவர் வாகன உரிமையாளர்களுக்கு அறிவுறுத்தினார்.

“நாங்கள் வெளிநாட்டவர்களுக்கு எதிரானவர்கள் அல்ல, ஆனால் அவர்கள் இந்த நாட்டில் உள்ள விதிகளை பின்பற்ற வேண்டும்,” என்று அவர் மேலும் கூறினார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here