பி.ஆர். ராஜன்
படங்கள் : பி. மலையாண்டி
பெஸ்தாரி ஜெயா பிபிஆர் ஹார்மோனி மடானி இன்று மே 6ஆம் தேதி ஒரு புதிய வரலாற்றைப் பதிவு செய்திருக்கிறது. மத்திய மடானி அரசாங்கம் – சிலாங்கூர் மாநில அரசாங்கம் ஆகியவற்றின் கூட்டு முயற்சியில் ஐந்து தோட்டங்களைச் சேர்ந்த 245 பாட்டாளிகளுக்கு தரை வீடுகள் கட்டித் தரப்படவுள்ளன.
20 ஏக்கர் நிலம், 75 மில்லியன் ரிங்கிட் இந்த வீடமைப்புத் திட்டத்திற்காக ஒதுக்கப்பட்டிருக்கிறது. இதில் மாநில அரசாங்கம் 40 மில்லியன் ரிங்கிட்டும் சிலாங்கூர் மாநில அரசாங்கம் 35 மில்லியன் ரிங்கிட்டும் வழங்கியிருக்கின்றன. 20 ஏக்கர் நிலத்தை பெர்ஜெயா கார்ப் இலவசமாக வழங்கியிருக்கிறது.
கட்டுமானப் பணிகள் 2026 மத்தியில் நிறைவு பெறும் என்று எதிர்பார்க்கப்படுவதாக இந்த வரலாற்றுப்பூர்வ தகவலை அறிவித்த வீடமைப்பு, ஊராட்சித் துறை அமைச்சர் ஙா கோர் மிங் தெரிவித்தார். இந்நிகழ்ச்சியில் சிலாங்கூர் மாநில அரசு ஆட்சிக் குழு உறுப்பினர் வீ. பாப்பாராய்டு, செந்தோசா சட்டமன்ற உறுப்பினர் குணராஜ் ஜோர்ஜ், உலுசிலாங்கூர் நாடாளுமன்றத் தொகுதி பிகேஆர் ஒருங்கிணைப்பாளர் டாக்டர் சத்தியபிரகாஷ் நடராஜன் ஆகியோர் கலந்துகொண்டனர்.
மேரி, நைகல் கார்டனர், புக்கிட் தாஹார், சுங்கை திங்கி, மிஞ்ஞாக் ஆகிய 5 தோட்டங்களைச் சேர்ந்த இப்பாட்டாளிகள் 1998ஆம் ஆண்டு தொடங்கி இந்த வீட்டுடைமைப் பிரச்சினைக்குத் தொடர்ந்து போராடி வந்தனர். கிட்டத்தட்ட 26 ஆண்டுகள் காத்திருந்த இந்தப் பாட்டாளிகளின் வாழ்க்கையில் இன்று ஒரு பொன்னாள்.
இந்தப் பிரச்சினைக்கு இவ்வளவு விரைவில் தீர்வு காண்பதற்கு முழு மூச்சாகப் பாடுபட்ட சிலாங்கூர் மாநில மனிதவளம், ஏழ்மை துடைத்தொழிப்பு துறை ஆட்சிக் குழு உறுப்பினர் பாப்பாராய்டு, இதற்கு விரைவான ஒப்புதல் வழங்கிய பிரதமர் டத்தோஸ்ரீ அன்வார் இப்ராஹிம், சிலாங்கூர் மாநில மந்திரி பெசார் டத்தோஸ்ரீ அமிருடின் ஷாரி ஆகியோருக்கு வீடுகள் கிடைக்கப் பெற்றிருக்கும் தோட்டப் பாட்டாளிகள் நன்றி தெரிவித்தனர்.






















