கெர்லிங் ஸ்ரீசுப்பிரமணியர் ஆலயத்திற்கு புதிய சமூக மண்டபம் தேவை என்று ம.இ.கா. முன்னாள் இளைஞர் பகுதி துணைத் தலைவர் வீ. முகிலன் கேட்டுக் கொண்டார். தற்போதுள்ள மண்டபம் மிகவும் மோசமான நிலையில் இருக்கிறது என்று குறிப்பிட்ட அவர், இங்கு சாலையில் ஏற்பட்டுள்ள பெரிய அளவிலான குழிகளும் விரைந்து மூடப்பட வேண்டும் என்று கேட்டுக் கொண்டார்.
லெம்பா பெரிங்கின் கெர்லிங்கிலுள்ள சாலை வாகனப் போக்குவரத்துக்கு ஆபத்தை ஏற்படுத்தக்கூடிய பெரிய அளவிலான குழிகளைக் கொண்டிருக்கின்றது. விபரீதங்கள் நிகழ்வதற்கு முன்னதாக அவை மூடப்பட வேண்டியது அவசியமாகும் என்று அவர் குறிப்பிட்டார்.

அதேசமயத்தில் புக்கிட் பெருந்தோங் தேசிய வகை தமிழ்ப் பள்ளிக்குப் புதிய கட்டடம் நிர்மாணிக்கப்பட வேண்டியதன் அவசியத்தையும் அவர் சுட்டிக் காட்டினார்.
தொடர்ந்து வரும் மே 11ஆம் தேதி நடைபெறும் கோல குபு பாரு சட்டமன்றத் தொகுதி இடைத்தேர்தலில் இந்திய வாக்காளர்கள் பெரிய எண்ணிக்கையில் வந்து வாக்களிக்க வேண்டும் என்று முகிலன் கேட்டுக் கொண்டார்.
இந்திய வாக்காளர்களின் ஒவ்வொரு வாக்கும் பக்காத்தான் ஹராப்பான் வேட்பாளர் பாங் சொக் தாவ் வெற்றியை நிர்ணயம் செய்யும். ஒற்றுமை அரசாங்க வேட்பாளர் வெற்றிப் பெறும் பட்சத்தில் இங்குள்ள வாக்காளர்களுக்கு பல்வேறு பலன்களைக் கொண்டு வருவதோடு தொகுதி மேம்பாட்டிலும் அதிக கவனம் செலுத்தப்படும் என்று சொன்னார்.
மறைந்த இத்தொகுதி சட்டமன்ற உறுப்பினர் லீ கி இயோங் மிகச் சிறந்த வகையில் பணியாற்றியிருக்கிறார். தொகுதி மக்களும் மிக நெருக்கமான அவருடன் பழகியிருக்கின்றனர். இந்நிலை தொடர்வதற்கு பக்காத்தான் ஹராப்பான் வேட்பாளருக்கு ஆதரவு தெரிவிக்க வேண்டியது அவசியமாகும்.
கோல குபு பாரு மக்களுக்கு சேவையாற்றுவதற்கும் தன்னுடைய திறமைகளை வெளிப்படுத்துவதற்கு 31 வயது பாங்கிற்கு ஒரு வாய்ப்பு வழங்கப்படவேண்டும் என்று முகிலன் கேட்டுக் கொண்டார்.
உணர்ச்சிவயப்பட்டு எந்தவொரு முடிவையும் இந்திய வாக்காளர்கள் எடுக்கக்கூடாது. இந்த இடைத் தேர்தலை புறக்கணிக்க வேண்டும் என்ற ஒரு தரப்பினரின் பிரச்சாரத்திற்கு செவிசாய்க்க வேண்டாம் என்று அவர் கேட்டுக் கொண்டார்.





















