அம்னோவில் இருந்து 6 ஆண்டுகள் நீக்கப்பட்டது குறித்து மேல்முறையீடு செய்ய மாட்டேன்; ஹிஷாமுடின்

அம்னோவின் முன்னாள் துணைத் தலைவர் டத்தோஸ்ரீ ஹிஷாமுடின் ஹுசைன், கட்சியில் இருந்து 6 ஆண்டுகள் இடைநீக்கம் செய்யப்பட்டதை எதிர்த்து மேல்முறையீடு செய்யப் போவதில்லை என்று மீண்டும் வலியுறுத்தியுள்ளார்.

நடைமுறைகளை பின்பற்றவில்லை எனக் கூறி இடைநீக்கம் செய்யப்பட்டதற்கான காரணம் குறித்து தாம் இருட்டில் இருப்பதாக முன்னாள் பாதுகாப்பு அமைச்சர் கூறினார்.

நடைமுறைகளைப் பின்பற்றாமல் நான் இடைநீக்கம் செய்யப்பட்டேன். ஒழுக்காற்று குழுவை எதிர்கொள்ள நான் அழைக்கப்படவில்லை. ஒழுக்காற்று சபையினால் கடிதம் எதுவும் வழங்கப்படவில்லை. குறைந்தபட்சம் எழுத்துப்பூர்வ பதிலையாவது அளிக்கச் சொல்லுங்கள் என்று அவர் ஒரு டிக்டோக் வீடியோவில் கூறினார்.

என்னை இடைநீக்கம் செய்ய முடிவு செய்த நபரிடம் நான் ஏன் முறையிட வேண்டும்? எங்களை இடைநீக்கம் செய்த நபரிடம் (நாங்கள்) முறையிட வேண்டுமா?. இந்த முடிவை மேல்முறையீடு செய்வது தவறாக இருப்பதற்கு ஒப்பானது என்றும் செம்ப்ராங் நாடாளுமன்ற உறுப்பினர் தெரிவித்தார். “முறையீடு செய்ய எனக்கு மனமில்லை,” என்று அவர் மேலும் கூறினார்.

ஜனவரி 27 அன்று அம்னோ உச்ச கவுன்சில் எடுத்த முடிவில் ஹிஷாமுடின் ஆறு ஆண்டுகள் இடைநீக்கம் செய்யப்பட்டார்.

ஹிஷாமுதீனைத் தவிர, முன்னாள் அம்னோ தகவல் தலைவர் ஷஹரில் ஹம்தான், முன்னாள் இளைஞர் நிர்வாக உறுப்பினர் டத்தோ டாக்டர் ஃபதுல் பாரி மாட் ஜாஹ்யா, ஜோகூர் மாநில முன்னாள் நிர்வாக உறுப்பினரும் தெப்ராவ் அம்னோ பிரிவின் தலைவருமான டத்தோ மௌலிசன் புஜாங் மற்றும் ஜெம்போல் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் டத்தோஸ்ரீ முகமட் சலீம் முகமட் ஷெரீப் ஆகியோரும் 6 ஆண்டுகள் இடைநீக்கம் செய்யப்பட்டனர்.

முன்னாள் அம்னோ இளைஞர் தலைவர் கைரி ஜமாலுடின் மற்றும் உச்ச மன்ற உறுப்பினர் டான்ஸ்ரீ நோ ஒமர் ஆகியோர் கட்சியில் இருந்து நீக்கப்பட்டனர்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here