கடந்த வருடம் அக்டோபர் மாதம் வாடகைத்தாய் மூலம் நயன்தாரா இரட்டை குழந்தைகள் பெற்றுக்கொண்டார். அந்த குழந்தைகளை அருகில் இருந்து கவனித்துக் கொள்வற்காக சினிமாவுக்கு முழுக்கு போடும் முடிவை அவர் எடுத்து இருக்கிறாராம். தற்போது இந்தியில் ஷாருக்கானுடன் ஜவான் படத்தில் நடித்து வருகிறார்.
பெயரிடப்படாத தனது 75-வது படத்தில் நடிக்கவும் ஒப்பந்தமாகி உள்ளார். ஜெயம் ரவியுடன் இறைவன் உள்பட மேலும் 2 படங்களும் கைவசம் உள்ளன. இந்த படங்களை விரைவாக முடித்து கொடுத்துவிட்டு சினிமாவை விட்டு விலகப்போகிறார் என்றும், நடிப்பதை நிறுத்தினாலும் கணவர் விக்னேஷ் சிவனுடன் இணைந்து படங்கள் தயாரிக்கும் பணிகளில் ஈடுபடுவார் என்றும் கூறப்படுகிறது.
ஆனாலும் நயன்தாரா தரப்பில் இதனை உறுதிப்படுத்தவில்லை. கேரளாவை சேர்ந்த நயன்தாரா 2005-ல் ஐயா படம் மூலம் தமிழ் திரையுலகில் அறிமுகமாகி 15 ஆண்டுகளுக்கும் மேலாக முன்னணி நடிகையாக கொடி கட்டி பறக்கிறார்.
கதாநாயகிக்கு முக்கியத்துவம் உள்ள பல படங்களில் நடித்து இருக்கிறார். இந்த படங்கள் முன்னணி கதாநாயகர்களின் படங்களுக்கு இணையாக வசூல் குவித்து திரையுலகினரை ஆச்சரியப்படுத்தின. அதிக சம்பளம் பெறும் தென்னிந்திய நடிகைகள் பட்டியலில் முதல் இடத்தில் இருக்கிறார்.