குடியிருப்புகளுக்கு வர்ணம் தெளித்தல் போன்ற செயலில் ஈடுபட்ட ஆடவர் கைது ; சந்தேக நபரின் கைப்பேசியில் இருந்த காணொளி மூலம் அம்பலமான குற்றம்

இஸ்கந்தர் புத்திரி, ஸ்ரீ ஆலாம் மற்றும் தென் ஜோகூர் பாருவைச் சுற்றி அமைந்துள்ள குடியிருப்பு பகுதிகளில் வர்ணம் பூசுதல், அச்சுறுத்தல் நோட்டீஸ் ஒட்டுதல் போன்ற செயல்களில் ஈடுபட்ட ஒரு ஆடவரின் குற்றம், அவரது கைப்பேசியில் பதிவு பண்ணி வைத்திருந்த காணொளிகள் மூலம் அம்பலமானது.

போலீசாருக்கு கிடைத்த தகவலின் அடிப்படையில், கைது செய்யப்பட்ட 27 வயது இளைஞர் சுமார் ஒரு மாதத்திற்கு முன்னிலிருந்து இவ்வாறான செயல்களில் ஈடுபட்டது கண்டறியப்பட்டது என்று, இஸ்கந்தர் புத்திரி மாவட்ட காவல்துறைத் தலைவர், துணை ஆணையர் ரஹ்மட் ஆரிஃபின் கூறினார்.

விசாரணையின் விளைவாக, வர்ணம் பூசுதல், அச்சுறுத்தல் நோட்டீஸ் ஒட்டுதல் மற்றும் எட்டு குடியிருப்புகள் சம்பந்தப்பட்ட வாயில்களை பூட்டுதல் போன்ற வழக்குகளில் சந்தேகநபர் தொடர்புடையதாக அவரே ஒப்புக்கொண்டார்.

“சந்தேக நபரின் கைத்தொலைபேசியை சோதனை செய்ததில், வர்ணப்பூச்சு தெளிக்கும் சம்பவங்களின் எட்டு பதிவுகள் இருந்தன” என்று, அவர் மேலும் கூறினார்.

“சந்தேக நபர் இன்று முதல் எதிர்வரும் மார்ச் 12ஆம் திகதி வரை நான்கு நாட்களுக்கு விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளார் என்றும், குற்றவியல் சட்டத்தின் பிரிவு 427 இன் படி இவ்வழக்கு விசாரிக்கப்படுவதாகவும், அவர் இன்று வெளியிட்டுள்ள ஒரு ஊடக அறிக்கையின் மூலம் தெரிவித்தார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here