இன்று காலை, புக்கிட் பேசிக்கு அருகிலுள்ள LPT2 நெடுஞ்சாலையின் 372.1 ஆவது கிலோமீட்டரில், ஒரு கண்டெய்னர் லோரி விபத்தில் சிக்கியதில் லோரி ஓட்டுநர் உயிரிழந்தார்.
காலை 8.20 மணியளவில் நடந்த சம்பவத்தில் பாதிக்கப்பட்ட இப்ராஹிம் முஹமட் சாலி, 52 பகாங், மெந்தக்காப், தாமான் புக்கிட் பெண்டேராவைச் சேர்ந்தவர் என்றும், அவர் தலையில் ஏற்பட்ட பலத்த காயம் காரணமாக சம்பவ இடத்திலேயே இறந்ததாகவும், டுங்கூன் மாவட்ட காவல்துறை தலைவர், கண்காணிப்பாளர் பஹாருதீன் அப்துல்லா தெரிவித்தார்.
குவாந்தான் திசையில் இருந்து கோலா திரெங்கானு நோக்கி சென்ற கண்டெய்னர் லோரி, இடதுபுறப் பாதையில் இருந்து திடீரென வலது பக்கம் நுழைந்ததால், இந்தச் சம்பவம் நடந்திருக்கலாம் என முதற்கட்ட விசாரணையில் அறியமுடிகிறது என்று அவர் கூறினார்.
அதே சமயம், சாலையின் வலதுபுறத்தில் டீசல் ஏற்றி வந்த ஜித்ரா ரக டேங்கர் லோரி, விபத்துக்குள்ளான லாரியின் பின்புறம் மோதியது. இதனால் இப்ராஹிம் ஓட்டிச் சென்ற லோரி, சாலையின் நடுவில் இருந்த இரும்புத் தடுப்பில் மோதி, சாலையின் குறுக்கே கவிழ்ந்தது.
அப்போது டேங்கர் கட்டுப்பாட்டை இழந்து சாலையின் இடதுபுறத்தில் உள்ள இரும்பு தடுப்பு மீது மோதி பள்ளத்தில் விழுந்ததாக பஹாருதீன் கூறினார்.
“டேங்கர் ஓட்டுநர், 24 வயதுடைய அமிர் பிர்தௌஸ் சே அப்துல்லா என்பவரது இடது காலில் காயம் ஏற்பட்டதுடன் அவரது முதுகு தண்டு உடைந்தது,” என்று அவர் மேலும் கூறினார்.
காயமடைந்தவர் சிகிச்சைக்காக டுங்கூன் மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டதாகவும், உயிரிழந்தவரின் சடலம் மேல் நடவடிக்கைக்காக அதே மருத்துவமனையின் தடயவியல் பிரிவுக்கு கொண்டு செல்லப்பட்டதாகவும் பஹாருடின் கூறினார்.