கோலாலம்பூர்:
மலேசியக் குடும்பங்களின் வாழ்வாதாரத்தை மேம்படுத்தும் நோக்கில், 2026-ஆம் ஆண்டிற்கான சிறு மற்றும் குறு தொழில் முனைவோருக்கான நிதி வசதியாக 5 பில்லியன் ரிங்கிட்டிற்கும் அதிகமான தொகையை அரசாங்கம் ஒதுக்கீடு செய்துள்ளது.
சுமார் 4 லட்சம் சிறு வணிகர்கள் பயன்பெறும் வகையில் அறிவிக்கப்பட்டுள்ள இத்திட்டத்தில், குறைந்தபட்சம் 3 சதவீத வட்டி விகிதத்தில் ஒரு லட்சம் ரிங்கிட் வரை கடனுதவி வழங்கப்படவுள்ள நிலையில், தெக்குன் (TEKUN) மற்றும் மாரா (MARA) உள்ளிட்ட முக்கிய நிதி நிறுவனங்களுடன் பிரதமர் டத்தோ ஸ்ரீ அன்வார் இப்ராஹிம் இன்று ஆலோசனைகளை மேற்கொண்டார்.
குறிப்பாக, சந்தை வியாபாரிகள், இளைஞர்கள், பெண்கள் போன்ற அடித்தட்டு மக்களிடம் இத்திட்டம் முழுமையாகச் சென்றடைவதை உறுதி செய்யுமாறு அதிகாரிகளுக்கு உத்தரவிட்டுள்ள பிரதமர், விண்ணப்ப நடைமுறைகளை எளிமையாக்கி கடன் அனுமதிகளை விரைவுபடுத்த வேண்டும் எனவும் வலியுறுத்தினார்.
இதன் மூலம் மூலதனம் இன்றித் தவிக்கும் சிறு வணிகர்கள் தங்களின் பொருளாதார நிலையை உயர்த்திக் கொள்ள ஒரு பொன்னான வாய்ப்பு உருவாக்கப்பட்டுள்ளதாக அவர் மேலும் தெரிவித்தார்.




















