கோலாலம்பூர்:
கோலாலம்பூர், புடு பிளாஸா வணிக வளாகத்திற்கு முன்பாக இன்று காலை ஏற்பட்ட மண் அமிழ்வில் சிக்கி பெரோடுவா அல்சா ரக கார் ஒன்றின் முன்பக்க சக்கரம் குழிக்குள் புதைந்ததால் அப்பகுதியில் பெரும் பரபரப்பு ஏற்பட்டது.
இது குறித்து காலை 11.11 மணியளவில் அவசர அழைப்பைப் பெற்ற புடு தீயணைப்பு, மீட்பு நிலையத்தினர், சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து தீயணைப்பு வாகனத்தின் இழுவை இயந்திரத்தைப் பயன்படுத்தி காரைப் பத்திரமாக மீட்டனர்.
அதிர்ஷ்டவசமாக இந்த விபத்தில் எவருக்கும் காயம் ஏற்படவில்லை என்பதை உறுதிப்படுத்திய நடவடிக்கைக் குழுத் தளபதி மசூரி மாட் ஜைன், மேலதிக நடவடிக்கைகளுக்காக இவ்விவகாரம் கோலாலம்பூர் மாநகர் மன்றத்திடம் ஒப்படைக்கப்பட்டுள்ளதாகத் தெரிவித்தார்.
சமூக ஊடகங்களில் இச்சம்பவம் குறித்த காணொளி பரவி வரும் வேளையில், நகர்ப்புற சாலைகளின் பாதுகாப்பு குறித்து பொதுமக்கள் தங்கள் கவலைகளை வெளிப்படுத்தி வருகின்றனர்.




















