கொடுமைப்படுத்திய முதலாளி; 1,000 கி.மீ. நடந்தே ஊர் திரும்பிய தொழிலாளிகள்

முதலாளியின் சித்திரவதையைப் பொறுத்துக்கொள்ள முடியாத தொழிலாளிகள் மூவர், ஆயிரம் கிலோமீட்டர் தொலைவிற்குமேல் நடந்து ஊர் திரும்பிய சம்பவம் இந்தியாவில் நிகழ்ந்துள்ளது.

ஒடிசா மாநிலம், காலாஹண்டி மாவட்டம், டிங்கல்கன் எனும் சிற்றூரைச் சேர்ந்தவர்கள் கத்தர் மாஜி, புடு மாஜி மற்றும் பிகாரி மாஜி.

இவர்கள் உட்பட மொத்தம் 12 பேர் இரண்டு மாதங்களுக்கு முன்னர் இடைத்தரகர் ஒருவர் மூலம் வேலைக்காக பெங்களூரு சென்றனர். அங்கு சென்றதும் அவர்களுக்கு ஒரு நிறுவனத்தில் வேலை கிடைத்தது.

ஆனாலும், அவர்களுக்குச் சம்பளம் தர முதலாளி மறுத்துவிட்டதாகக் கூறப்படுகிறது. சம்பள நிலுவைத்தொகையை ஊழியர்கள் கேட்டபோது அவர்கள் அடித்துத் துன்புறுத்தப்பட்டதாகவும் சொல்லப்படுகிறது.

“பணம் சம்பாதித்து, குடும்பத்தைக் காப்பாற்றலாம் என்ற நம்பிக்கையில் பெங்களூரு சென்றோம். ஆனால், நிறுவனத்தில் எங்களுக்குச் சம்பளம் தர மறுத்தனர். சம்பளத்தைக் கேட்டபோது எங்களை அடித்தனர். அவர்களின் கொடுமை தாங்க முடியாமல் அங்கிருந்து கிளம்பிவிட்டோம்,” என்றார் திரு பிகாரி.

கையில் பணமில்லாதபோதும் மூவரும் மார்ச் 26ஆம் தேதி சொந்த ஊர் நோக்கி நடக்கத் தொடங்கினர். பெரும்பாலான தொலைவு அவர்கள் நடந்தனர். இடையிடையே கிடைத்த வாகனங்களில் தொற்றிக்கொண்டனர்.

கடந்த சனிக்கிழமை ஆந்திராவின் விஜயநகரத்தை அடைந்த அவர்கள், பின்னர் அங்கிருந்து கோராபுட் நோக்கி நடக்கத் தொடங்கியதாக இந்திய ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.

அவர்களைக் கண்ட சமூக ஆர்வலர்கள் சிலர், அவர்களிடம் விசாரித்த பின்னரே விவரம் தெரியவந்தது. அங்கிருந்த கடைக்காரர் ஒருவர் அவருக்கு உணவளித்தார். பின்னர் அப்பகுதியைச் சேர்ந்த வாகனமோட்டிகள் சங்கத் தலைவர் ஒருவர், அவர்களுக்கு 1,500 ரூபாய் நிதியுதவி அளித்ததோடு, ஊர் திரும்ப வாகன வசதியும் ஏற்பாடு செய்து தந்தார் என்று கூறப்படுகிறது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here