கோலாலம்பூரிலிருந்து 20 பயணிகளுடன் ஜாலான் துவாங்கு அப்துல் ஹலிம் சென்ற விரைவுப் பேருந்தில் தீ ..!

நேற்றிரவு ஜாலான் துவாங்கு அப்துல் ஹலிம் என்ற இடத்தில், விரைவுப் பேருந்து தீப்பிடித்து எரிந்ததில் சுமார் 20 பயணிகளும் ஓட்டுநரும் உயிர் தப்பினர்.

இரவு 10:00 மணியளவில் நடந்த இந்த சம்பவம் தொடர்பில், கோலாலம்பூர் செயல்பாட்டு மையத்திற்கு இரவு 10.23 மணிக்கு அவசர அழைப்பு வந்ததாக செயல்பாட்டுத் தளபதி, மூத்த தீயணைப்பு அதிகாரி II, ஃபாடில் ஹெசாம் முகமட் தெரிவித்தார்.

அதனைத் தொடர்ந்து, செந்தூல் மற்றும் ஸ்ரீ ஹர்தாமாஸ் தீயணைப்பு மற்றும் மீட்பு நிலையத்திலிருந்து இயந்திரங்களுடன் மொத்தம் 17 உறுப்பினர்கள் மற்றும் அதிகாரிகள் சம்பவம் நடந்த இடத்திற்கு விரைந்தனர்” என்று அவர் நேற்று இரவு வெளியிட்ட ஒரு அறிக்கையில் தெரிவித்தார்.

குறித்த விரைவுப்பேருந்து கேஎல் சென்ட்ரலில் இருந்து ஜாலான் துவாங்கு அப்துல் ஹலிம் நோக்கி சென்று கொண்டிருந்ததாக அவர் கூறினார்.

தீயணைப்பு வீரர்கள் சம்பவ இடத்திற்கு வந்தபோது, ​​ஒரு இரட்டை அடுக்கு விரைவுப் பேருந்தில் 50 விழுக்காடு தீயில் எரிந்து போயிருந்தது. இரவு 11.47 மணிக்கு தீ கட்டுக்குள் கொண்டு வரப்பட்டு, நள்ளிரவு 12.09 மணிக்கு முற்றிலும் அணைக்கப்பட்டது.

“தீ விபத்துக்கான காரணம் இன்னும் விசாரணையில் உள்ளது,” என்று அவர் விளக்கினார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here