கோலாலம்பூர்:
KLIA டெர்மினல் 1-ல் உள்ள ஏரோட்ரெய்ன் சேவைகளில் எந்தவிதமான இடையூறும் ஏற்படாமல் தொடர்ந்து கண்காணித்து பராமரிக்குமாறு மலேசிய விமான நிலையங்கள் ஹோல்டிங்ஸ் பெர்ஹாட் (MAHB) நிறுவனத்திற்கு போக்குவரத்து அமைச்சர் அந்தோனி லோக் உத்தரவிட்டுள்ளார்.
RM456 மில்லியன் செலவில் மேம்படுத்தப்பட்ட ஏரோட்ரெய்ன் சேவை, ஜூலை 1-ஆம் தேதி மீண்டும் தொடங்கப்பட்டதிலிருந்து, கிட்டத்தட்ட இரண்டு மில்லியன் பயணிகளை ஏற்றிச் சென்றுள்ளது. இருப்பினும், சில சிறிய தொழில்நுட்ப கோளாறுகளும், வெள்ளம் காரணமாக சேவை தற்காலிகமாக நிறுத்தப்பட்ட சம்பவங்களும் பதிவாகியுள்ளன.
எனவேதான், இந்த சேவை உயர் நம்பகத்தன்மையுடன் இருப்பதை MAHB உறுதி செய்ய வேண்டும் என்று லோக் வலியுறுத்தினார். மேலும், இதற்காக ஒரு பிரத்யேக கண்காணிப்பு குழுவை நியமிக்க வேண்டும் என்றும், ஒப்பந்ததாரர் பொறுப்பேற்க வேண்டும் என்றும் அவர் கூறினார்.
மேம்படுத்தப்பட்ட அமைப்பு இன்னும் உத்தரவாத காலத்தின் கீழ் இருப்பதால், எந்தவொரு பிரச்சினைகளுக்கும் ஒப்பந்ததாரரே பொறுப்பு என்று அவர் தெரிவித்தார்.
RM742 மில்லியன் மதிப்பிலான இந்த மேம்பாட்டு முயற்சி, கோலாலம்பூர் அனைத்து லக விமான நிலையத்தை (KLIA) ஒரு பிராந்திய விமானப் போக்குவரத்து மையமாக மேம்படுத்துவதற்காக MAHB மேற்கொண்ட ஒரு பெரிய திட்டத்தின் ஒரு பகுதியாகும்.























