பெட்டாலிங் ஜெயாவின் கம்போங் சுங்கை ஆராவில் உள்ள குப்பை வீசும் இடத்திற்கு அருகில் கைவிடப்பட்ட நிலையில், தொப்புள் கொடியுடன் புதிதாக பிறந்த பெண் குழந்தை ஒன்று கண்டுபிடிக்கப்பட்டது.
இன்று காலை 7.15 மணியளவில் ஒரு பெண்ணும் அவரது மகனும் குழந்தையை கண்டுபிடித்ததாக டாமான்சாரா காவல் நிலையத்தில் புகார் அளித்தனர் என்று, பெட்டாலிங் ஜெயா மாவட்ட காவல்துறைத் தலைவர், துணை ஆணையர் முகமட் ஃபக்ருதீன் அப்துல் ஹமீத் கூறினார்.
2.5 கிலோ எடையுள்ள குழந்தை மஞ்சள் துணியில் சுற்றப்பட்ட நிலையில் காணப்பட்டது என்றும், பின்னர் பரிசோதனைக்காக அது சுங்கை பூலோ மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டதாக அவர் கூறினார்.
மேலும் “குழந்தையின் உடல்நிலை சீராக இருப்பதாக மருத்துவர்கள் உறுதி செய்துள்ளனர் என்றும், தற்போது அந்தக் குழந்தை மருத்துவமனையின் குழந்தைகள் பிரிவில் சிகிச்சை பெற்று வருவதாகவும், குற்றவியல் சட்டம் பிரிவு 317ன் கீழ் இந்த வழக்கு விசாரிக்கப்பட்டு வருவதாகவும் முகமது ஃபக்ருதீன் இன்று வெளியிட்டுள்ள ஒரு அறிக்கையில் கூறினார்.