முதியோர்களை ஏமாற்றும் மோசடிக் கும்பலுடன் தொடர்புடையவர்கள் என நம்பப்படும் ஐந்து சீன பிரஜைகள் கைது

கடந்த ஏப்ரல் 27 அன்று கோலாலம்பூர் அனைத்துலக விமான நிலையத்தில் (KLIA) போலீசார் நடத்திய சோதனையில், RM124,400 மதிப்புள்ள மோசடி சம்பவங்களில் ஈடுபட்டதற்காக ஐந்து சீன பிரஜைகளை கைது செய்தனர்.

பினாங்கு மாநிலத்தில் குறித்த கும்பலால் பாதிக்கப்பட்ட ஐந்து மூதாட்டிகள் அளித்த காவல்துறை புகார்களைத் தொடர்ந்து, அவர்கள் கைது செய்யப்பட்டதாக பினாங்கு காவல்துறை துணைத் தலைவர், டத்தோ பிசோல் சாலே கூறினார்.

“ஒரு சீன நாட்டு ஆடவர் மற்றும் 40 முதல் 50 வயதுக்குட்பட்ட நான்கு சீன நாட்டுப் பெண்களை KLIA இல் கைது செய்த போலீசார், அவர்கள் தங்கள் சொந்த நாட்டிற்கு (சீனா) தப்பிச் செல்ல விரும்பியபோது, ​​அவர்களின் பயண பதிவுகளின் அடிப்படையில், அவர்கள் கைது செய்யப்பட்டனர் என்றார்.

“ஜனவரி முதல் பினாங்கில் மோசடி நடவடிக்கைகளை மேற்கொள்வதில் கும்பல் தீவிரமாக செயல்பட்டுள்ளது என்று எங்கள் விசாரணையில் கண்டறியப்பட்டது, மேலும் அவர்கள் போலி மருந்து விற்பனை மற்றும் நோய்களைக் குணப்படுத்த நேருக்கு நேர் பிரார்த்தனை ஆகியவற்றை செய்து பாதிக்கப்பட்டவர்களை ஏமாற்றியுள்ளனர்,” என்று அவர் இன்று ஜார்ஜ் டவுனில் நடந்த ஒரு செய்தியாளர் கூட்டத்தில் கூறினார்.

“சந்தேக நபர்களை கைது செய்ததைத் தொடர்ந்து, அவர்களிடமிருந்து ஒன்பது கைத்தொலைபேசிகள், ஐந்து லக்கேஜ் பைகள், பல்வேறு வகையான நகைகள், பல்வேறு பிராண்டுகளின் 11 கைக்கடிகாரங்கள் மற்றும் 943 சீன யுவான் துணுக்குகள் மற்றும் ரொக்கம் RM60,853” ஆகியன பறிமுதல் செய்யப்பட்டடன என்று அவர் கூறினார்.

மோசடி செய்ததற்காக குற்றவியல் சட்டத்தின் பிரிவு 420 இன் கீழ் விசாரணைக்கு உதவுவதற்காக அவர்கள் அனைவரும் நாளை வரை விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளனர் என்றார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here