மூடா ஆறு மீண்டும் நீரால் நிரம்பியுள்ளது – மீனவர்கள் குஷி

கடந்த ஞாயிற்றுக்கிழமை கடுமையாக குறைந்து, வற்றிப்போன சுங்கை பட்டாணியிலுள்ள மூடா ஆற்றின் நீர்மட்டம், சிக்கில் உள்ள பெரிஸ் அணையில் இருந்து தண்ணீர் திறக்கப்பட்டதையடுத்து நேற்று மீண்டும் நிரம்பியுள்ளது.

முன்பு வறண்டு இருந்த அனைத்து பகுதிகளும் தண்ணீரால் நிரம்பியுள்ளன, மேலும் தற்போது ஆற்றில் மீன்பிடி நடவடிக்கைகளும் வழமைக்குத் திரும்பியுள்ளன.

வரலாற்றில் முதல்முறையாக ஆற்றின் நீர்மட்டம் திடீரென குறைந்ததைத் தொடர்ந்து, கவலையடைந்த மக்களுக்கு தற்போதுள்ள நிலைமை நிம்மதியை கொடுத்துள்ளது.

இஸ்மாயில் அப்துல்லா, 48, என்ற மீனவர் கூறுகையில், பிரச்னையை சமாளிக்க அதிகாரிகள் துரித நடவடிக்கை எடுத்ததால் தான் நிம்மதி அடைந்தேன் என்றார்.

“நேற்று (திங்கட்கிழமை) அதிகாலை முதலே ஆற்றில் நீர் நிரம்பத் தொடங்கியுள்ளதால், ஏராளமான மீனவர்கள் மீன், இறால் பிடிக்கச் சென்றுள்ளனர். அல்ஹம்துலில்லாஹ் நீர்மட்டம் முற்றாக மீண்டுள்ளதுடன் இன்று அனைத்து மீன்பிடி படகுகளும் வழமை போன்று மீன்பிடிக்க செல்ல முடியும்” என அவர் தெரிவித்தார்.

இதற்கிடையில், கோத்தா கோலா மூடாவில் வசிக்கும் 54 வயதான முஹமட் சாத் அப்துல்லா கூறுகையில், அப்பகுதியைச் சுற்றி ஏற்பட்ட நீர் விநியோகத் தடையின் பிரச்சினையும் நேற்று மாலை முதல் தீர்க்கப்பட்டதாகக் கூறினார்.

நேற்று, ஆற்றுப் படுகையில் உள்ள அணைக்கட்டுகளில் ஒன்றின் தானியங்கி எச்சரிக்கை சாதனம் (sensor) சேதம் அடைந்ததுடன், சுங்கை மூடாவின் நீர்மட்டம் திடீரென சரிந்ததால், கோலாமுடா, கூலிம் மற்றும் சில பாலிங் பகுதிகளில் நீர் விநியோகம் பாதிக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here