கூட்டரசு நெடுஞ்சாலையின் மோட்டார் சைக்கிள் பாதையில் கார் ஓட்டிச்சென்றது தொடர்பில் வெளியான காணொளி தொடர்பில், அந்த ஹோண்டா சிட்டியின் கார் ஓட்டுநரை போலீசார் கண்காணித்து வருகின்றனர்.
கோலாலம்பூரை நோக்கிச் செல்லும் கூட்டரசு நெடுஞ்சாலையில் நடந்த இந்தச் சம்பவத்தை @nanmanioi8715 என்ற டுவிட்டர் பயனர் ஒருவர், டுவிட்டரில் பகிர்ந்தபோது இந்த சம்பவம் வெளிச்சத்திற்கு வந்தது.
கூட்டரசு நெடுஞ்சாலையின் 30.1 ஆவது கிலோமீட்டரிலுள்ள மோட்டார் சைக்கிள் வழித்தடத்தில் வெள்ளை நிற ஹோண்டா சிட்டி கார் ஒன்று வளைந்து செல்வது, மோட்டார் சைக்கிள் ஓட்டுபவர்களிடையே விரக்தியை ஏற்படுத்தியது என்று, பெட்டாலிங் ஜெயா மாவட்ட காவல்துறைத் தலைவர், துணை ஆணையர் முகமட் ஃபக்ருடின் அப்துல் ஹமீட் கூறினார்.
குறித்த காணொளி தொடர்பில் கடந்த திங்கட்கிழமை மாலை 5:40 மணியளவில் வைரலான வீடியோ மூலம் காவல்துறையினருக்கு எச்சரிக்கை விடுக்கப்பட்டது. அதிர்ஷ்டவசமாக, இந்தச் செயல் காரணமாக மற்றய சாலைப் பயனாளிகளிடையே விபத்துகளோ காயங்களோ பதிவாகவில்லை.
இந்த சம்பவத்தினை வீடியோவாக பதிவு செய்த நபரை முன் வந்து விசாரணைக்கு உதவுமாறு போலீசார் வேண்டுகோள் விடுத்துள்ளனர் என்றார்.
தகவல் தெரிந்தவர்கள் போக்குவரத்து புலனாய்வு அதிகாரி இன்ஸ்பெக்டர் நாவலன் ரவீந்திரனை 014-2536820 என்ற எண்ணில் தொடர்பு கொள்ளலாம் அல்லது பெட்டாலிங் ஜெயா மாவட்ட காவல்துறை தலைமையகத்தின் போக்குவரத்து புலனாய்வு மற்றும் அமலாக்கப் பிரிவிற்குச் செல்லலாம் என்றார்.
சாலை போக்குவரத்து சட்டம் 1987 பிரிவு 42(1)ன் கீழ் இந்த வழக்கு விசாரிக்கப்பட்டு வருகிறது.








