சுங்கைப் பட்டாணி: போதைப்பொருள் பழக்கத்தின் கூடாரமாக மாறிய ஏழு பகுதிகள் என நம்பப்படும் இடங்களில், நேற்று போலீசார் மேற்கொண்ட “ஓப் தாபிஸ் காஸ்” என்ற குறியீட்டுப்பெயர் கொண்ட சோதனையில் மொத்தம் 66 போதைப் பித்தர்கள் கைது செய்யப்பட்டனர்.
ஜூன் 5 ஆம் தேதி தொடங்கி மூன்று நாட்கள் மேற்கொள்ளப்பட்ட நடவடிக்கையில் 20 அதிகாரிகள் மற்றும் போதைப்பொருள் குற்றப் புலனாய்வுத் துறை, கோல முடா மாவட்ட காவல்துறை தலைமையகத்தின் உறுப்பினர்கள் ஈடுபடுத்தப்பட்டனர்.
இந்த நடவடிக்கையில் கைது செய்யப்பட்ட அனைவரும் 17 முதல் 54 வயதுக்குட்பட்டவர்கள் என்று கோல முடா மாவட்ட காவல்துறைத் தலைவர், துணை ஆணையர் சைடி சே ஹாசன் தெரிவித்தார்.
குருன், தாமான் சினார் மெந்தாரி, தாமான் பண்டார் பாரு, தாமான் ரியா ஜெயா, தாமான் கெளடி, தாமான் ஸ்ரீ வாங் மற்றும் மக்கள் வீட்டுத் திட்டம் (பிபிஆர்) பயா நாஹு ஆகிய இடங்களில் உள்ள செம்பனைத் தோட்டப் பகுதியில் உள்ள போதைப்பொருள் கூடாரமாக செயற்படட இடங்களில் வைத்து, அவர்கள் அனைவரும் கைது செய்யப்பட்டனர்.
அவர்களிடமிருந்து RM6,633 மதிப்பிலான 66.30 கிராம் எடையுள்ள சியாபு வகை போதைப்பொருளையும், RM2,646 மதிப்பிலான 87.21 கிராம் ஹெரோயினையும் காவல்துறையினர் பறிமுதல் செய்ததாக சைடி கூறினார்.
ஆபத்தான போதைப்பொருள் சட்டம் 1952 இன் பிரிவு 12(2) மற்றும் பிரிவு 15(1)(a) இன் படி சம்பந்தப்பட்ட அனைத்து நபர்களும் தடுத்து வைக்கப்பட்டுள்ளனர் என்றும் அவர்கள் தற்போது விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளதாகவும் அவர் மேலும் கூறினார்.







