கோலாலம்பூர், ஜூன் 23-
வரும் சிலாங்கூர் மாநில சட்டமன்றத் தேர்தலில் மஇகா ஒரு மிகப்பெரிய சவாலை எதிர்கொண்டிருக்கிறது. இதுவரை தான் போட்டியிட்டு வந்த மூன்று சட்டமன்றத் தொகுதிகள் இந்த இடைத் தேர்தலில் கிடைக்குமா என்ற சந்தேகத்தில் கட்சி இருந்து வருகிறது.
செந்தோசா, பத்துகேவ்ஸ், ஈஜோக் ஆகிய மூன்று தொகுதிகளிலும் மஇகா கடந்த 14ஆவது பொதுத்தேர்தல் வரை போட்டியிட்டு தோல்வி கண்டது. 2013, 2018ஆம் ஆண்டுகளில் நடைபெற்ற சட்டமன்றத் தேர்தலிலும் மஇகா வேட்பாளர்கள் தோல்வியைத் தழுவினர்.
பாரிசான் நேஷனலில் ஓர் உறுப்புக் கட்சியாக மஇகா இருக்கிறது. 2022ஆம் ஆண்டு நவம்பர் மாதம் நடைபெற்ற நாட்டின் 15ஆவது பொதுத்தேர்தல் வரை பாரிசான் நேஷனல் கூட்டணியில் மஇகா தொடர்ந்து நேசக்கரம் நீட்டியது.
அப்போது மஇகாவின் பாரம்பரியத் தொகுதிகள் அக்கட்சிக்காக ஒதுக்கப்பட்டன. இருப்பினும் 2008 பொதுத்தேர்தலில் ஏற்பட்ட அரசியல் சுனாமிக்குப் பிறகு மஇகாவின் தோல்விகள் தொடர்கதையாக நீடித்தது.
இப்போது பாரிசான் நேஷனல் டத்தோஸ்ரீ அன்வார் இப்ராஹிம் தலைமையிலான ஒற்றுமை அரசாங்கத்தில் இடம்பெற்றிருக்கிறது. இதுநாள் வரை எதிரும் புதிருமாக இருந்து வந்த பாரிசான் நேஷனலும் பக்காத்தான் ஹராப்பானும் இந்தத் தேர்தலில் ஒரே அணியில் களம் காண்கின்றன.
டான்ஸ்ரீ முஹிடின் யாசின் தலைமையிலான பெரிக்காத்தான் நேஷனல் கூட்டணி 2023 சிலாங்கூர் மாநில சட்டமன்றத் தேர்தலில் பெரும் சவாலாக உருவாகி இருக்கின்ற நிலையில், எந்தவொரு தொகுதியிலும் தோல்வியைத் தழுவி விடக்கூடாது என்பதில் பாரிசான் நேஷனலும் பக்காத்தான் ஹராப்பானும் ஒரே நேர்கோட்டில் சிந்திக்கத் தொடங்கி இருக்கின்றன.
பாரிசான் நேஷனலின் முதுகெலும்பாக அம்னோ இருக்கிறது. அதே சமயம் மசீங், மஇகா அதில் உறுப்புக் கட்சிகளாக இடம்பெற்றிருக்கின்றன. பக்காத்தான் ஹராப்பான் கூட்டணியில் பிகேஆர், ஜஙெ்க, அமானா, மூடா ஆகிய கட்சிகள் இடம்பெற்றிருக்கின்றன.
பக்காத்தான் ஹராப்பான் கடந்த தேர்தலில் வெற்றி பெற்ற தொகுதிகளை அவ்வளவு எளிதாக விட்டுக் கொடுக்காது என்பது உறுதி. அதேபோன்று பாரிசான் நேஷனல் குறிப்பாக அம்னோ வெற்றி பெற்ற தொகுதிகளில் அக்கட்சி மீண்டும் போட்டியிட களம் இறங்கும்.
பெரிக்காத்தான் நேஷனல் கூட்டணியில் பெர்சத்து, பாஸ், கெராக்கான் ஆகிய கட்சிகள் இடம்பெற்றிருக்கின்றன. மலாய்க்காரர்களின் ஆதரவு பெரிக்காத்தான் நேஷனல் பக்கம் திரும்பி இருப்பதால், இந்த சட்டமன்றத் தேர்தலில் ஒற்றுமை அரசாங்கத்தில் இடம்பெற்றிருக்கும் பக்காத்தான் ஹராப்பான் கூட்டணியும் பாரிசான் நேஷனல் கூட்டணியும் மிகப்பெரிய சவாலை எதிர்நோக்கி இருக்கின்றன.
இந்நிலையில் தொடர்ச்சியாக தோல்வி கண்டு வரும் இந்த மூன்று தொகுதிகளும் மஇகாவுக்கு மீண்டும் வழங்கப்படுமா என்பது ஒரு மிகப்பெரிய கேள்விக்குறியாகவே ஆகி இருக்கிறது.