புதிய பிரதமருக்கான தேர்தல்: ஜூலை முதல் வாரம் கூடுகிறது தாய்லாந்து நாடாளுமன்றம்

தாய்லாந்தில் புதிதாக தேர்ந்தெடுக்கப்பட்ட நாடாளுமன்றம் ஜூலை மாத முதல் வாரத்தில் கூடுகிறது. அந்தக் கூட்டத்தில் புதிய அரசு அமைப்பது குறித்து முதலில் முடிவுசெய்யப்பட்டு பின்னர் பிரதமரைத் தேர்ந்தெடுக்க வாக்கெடுப்பு நடைபெறும்.

ஜூலை 3ஆம் தேதி நாடாளுமன்றம் கூடுவதற்கான அரசாணை வெளியிடப்பட்டுள்ளது. நாடாளுமன்ற திறப்பு நிகழ்வுக்கு மன்னர் மகா வஜிரலொங்கொர்ன் தலைமைத் தாங்குவார் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

அதற்கு மறுநாள் நாடாளுமன்ற உறுப்பினர்கள் நாடாளுமன்ற நாயகருக்கும் இரு துணை நாயகர்களுக்குமான வாக்குகளைப் பதிவுசெய்வார்கள்.

500 உறுப்பினர்கள் கொண்ட நாடாளுமன்றத்துக்கான தேர்தல் மே மாதம் 14ஆம் தேதி நடைபெற்றது. அந்தத் தேர்தலில் ஜனநாயகத்துக்கு ஆதரவான கட்சிகள் பெரும்பான்மைக்குத் தேவையான இடங்களில் வெற்றி கண்டு கிட்டத்தட்ட பத்தாண்டுகள் ராணுவம் ஆதரவில் நீடித்த ஆட்சியை முடிவுக்குக் கொண்டுவந்தன.

‘மூவ் ஃபார்வர்ட்’ கூட்டணி எட்டு கட்சிகளை இணைத்து ஆக அதிகமான 151 இடங்களுடன் அடுத்த அரசை அமைப்பது உறுதியான நிலையில் அதன் தலைவர் பிடா லிம்ஜரொன்ராட் அடுத்த பிரதமராவார் என எதிர்பார்க்கப்படுகிறது.

இருப்பினும், அவருக்கு ஊடகப் பங்குகள் உள்ளதாகக் கூறப்பட்டுவருவதால் பிரதமர் பதவியை ஏற்கும் வாய்ப்பை இழக்க நேரிடலாம் என்றும் சொல்லப்படுகிறது. ராணுவம் நியமித்துள்ள மேலவை தற்போது பிடாவின் சொத்து, கடன் குறித்த விவகாரங்களைக் கவனித்துவருகின்றன.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here