வாயாலேயே வடை சுட வேண்டாம்

பி.ஆர். ராஜன்

கோலாலம்பூர், ஜூலை 4-

மலேசிய இந்திய வாக்காளர்களின் வலிமையை மதிப்பிடும் அருகதை அம்னோவின் டத்தோ லொக்மான் நோர் அடாமிற்கு இல்லை. தேர்தல் காலத்தில் இவரின் அடாவடிப் பேச்சுகள் இந்திய சமுதாயத்தைக் காயப்படுத்துவதாக இருக்கிறது. குறிப்பாக இந்திய வாக்காளர்கள் பற்றிய இவரின் விமர்சனங்கள் வரம்பு மீறியதாக இருக்கின்றன. இந்திய வாக்காளர்களைப் பலவீனமாக நினைப்பதை இவர் உடனடியாக நிறுத்திக்கொள்ள வேண்டும்.

மலாய்க்காரர்கள் ஆதரவின்றி மஇகா வேட்பாளர்கள் வெற்றிபெற முடியாது என்பது இவரின் அரைவேக்காடு கண்டுபிடிப்பு. ஆனால் அதே சமயத்தில் இந்தியர்களின் ஓட்டுகள் இன்றி பாரிசான் நேஷனலின் பெரும்பாலான வேட்பாளர்கள் வெற்றிபெற முடியாது என்பது இவருக்குத் தெரியாமல் போனது மிகப்பெரிய வேடிக்கை. மலேசிய பொதுத்தேர்தல்களைப் பொறுத்தவரை ஆளுங்கட்சிகளின் வெற்றிக்குத்  துருப்புச்சீட்டுகளாக இருப்பவர்கள் இந்திய வாக்காளர்கள். இது மறுக்க முடியாத ஒரு மாபெரும் உண்மை. 

ஒவ்வொரு பொதுத்தேர்தலின்போதும் இந்திய வாக்காளர்களை மட்டம்தட்டுவதே  அம்னோவின் டத்தோ லொக்மான் நோர் அடாமிற்கு ஒரு பொழுதுபோக்காக இருக்கிறது. 

வாயாலேயே வடை சீடுவதில் வல்லவரான இவர், தன் வாயை வாடகைக்கு விட்டு  மற்றவர்களை இழிவுபடுத்துவதை ஒரு வழக்கமாகவே கொண்டிருக்கிறார். அம்னோவைச் சேர்ந்த இவர் நிச்சயமாக அவரின் தலைவர்களின் ஒப்புதல் இன்றி இதைச் செய்வதில்லை என்பது தெள்ளத்தெளிவான ஓர் உண்மை.

இவருடைய வரம்பு மீறிய பேச்சுகளை கட்சியின் உயர்மட்டத் தலைவர்கள் கண்டித்தது இல்லை என்பதற்கு இந்த யூகத்திற்கு ஒரு சான்றாக அமைகிறது. லொக்மானின் இந்த வரம்பு மீறிய பேச்சுகள், விமர்ங்னங்கள் இனங்களுக்கிடையில் ஓர் உரசலை ஏற்படுத்துகிறது என்பதை நிராகரிப்பதற்கில்லை.

அண்மையில் வரும் 6 மாநிலங்களின் சட்டமன்றத் தேர்தல்கள் குறித்து விமர்சித்த இவர் மஇகா, மசீச ஆகிய கட்சிகள் அம்னோவுக்கும் பாரிசான் நேஷனலுக்கும் ஒரு மிகப்பெரிய சுமை என்று வர்ணித்திருந்தார். பாரிசான் நேஷனலில் இடம்பெற்றுள்ள இந்த இரண்டு கட்சிகளையும் உடும்பு எனவும் அவர் விமர்சித்திருந்தார்.

அம்னோ இந்தத் தேர்தலில் இந்த இரண்டு கட்சிகளையும் சுமக்கும் நிலை  வேண்டாம் என்று அவர் பேசியிருந்தார். அது மட்டுமன்றி மலாய்க்காரர்களின் ஆதரவு இன்றி  இந்த இரண்டு கட்சிகளையும் சேர்ந்த வேட்பாளர்கள் வெற்றிபெற முடியாது என்று மிகவும் எகத்தாளமாகவும் சாடியிருந்தார்.

உண்மைதான். மலாய் வாக்காளர்களின் ஆதரவு இன்றி மலாய்க்காரர் அல்லாத மஇகா, மசீச வேட்பாளர்கள் வெற்றி பெற முடியாது. இதில் எந்தவித மாற்றுக் கருத்தும் இல்லை. ஆனால் அதே சமயத்தில் இந்தியர்களின் ஆதரவின்றி அம்னோ – பாரிசான் நேஷனல் கிட்டத்தட்ட 60 ஆண்டுகள் ஆட்சி நடத்தி சுகம் கண்டிருக்க முடியாது. இதனை லொக்மான் தெள்ளத்தெளிவாகவும்  ஆணித்தரமாகவும் புரிந்துகொள்ள வேண்டும்.

இந்தியர்களின் ஆதரவு, விசுவாசம் குறித்து கேள்வி எழுப்பும் தகுதி லொக்மானுக்கு இல்லை. மலாய்க்காரர்கள் மட்டுமே மற்றவர்களின் வெற்றிகளை உறுதி செய்கின்றனர் என்ற அவரின் கூப்பாடு அவர் ஓர் அரசியல் சுனியம் என்பதைத் தெளிவாகக் காட்டுகிறது.

மலேசிய இந்தியர்கள் வெற்றியின் துருப்புச்சீட்டு 

மலேசிய இந்தியர்களைப் பொறுத்தவரை ஒவ்வொரு பொதுத்தேர்தலிலும் பாரிசான் நேஷனலின் வெற்றியின் துருப்புச் சீட்டுகளாக இருந்திருக்கின்றனர் என்பதை அந்தக் கட்சியின் தலைவர்கள் மறந்திருக்கலாம். ஆனால் தேர்தல் வரலாறு அதனை நிராகரிக்காது. 

கிட்டத்தட்ட 60 தொகுதிகளுக்கு மேல் இந்தியர்களின் ஆதரவு இன்றி பாரிசான் நேஷனலால் குறிப்பாக அம்னோவால் வெற்றிகொள்ள முடியாது என்பது கல்வெட்டில் எழுதப்பட்ட ஓர் உண்மையாகவே இன்றளவும் இருந்து வருகிறது.

2008ஆம் ஆண்டு நடைபெற்ற பொதுத்தேர்தலின்போது இந்தியர்களின் ஆதரவு அலை அன்றைய பக்காத்தான் ராக்யாட் பக்கம் திரும்பியதால் பாரிசான் நேஷனல் – அம்னோவின் 60 ஆண்டுகால ஆட்சி அஸ்திவாரம் ஆட்டங்கண்டு கவிழ்ந்தது.

மலேசிய வரலாற்றில் ஒரு புதிய திருப்புமுனையாக அடுத்தடுத்து நடைபெற்ற பொதுத்தேர்தல்கள் விளங்கின. அம்னோ – பாரிசான் நேஷனலால் அதன் பிறகு தலைநிமிரவே முடியவில்லை. ஆட்சி அதிகாரத்தையும் கைப்பற்ற முடியவில்லை. இந்த உண்மையை லொக்மான் மறுப்பாரா? இவருக்கு இந்தத் துணிச்சல் இருக்கிறதா?

மலாய்க்காரர்கள் மத்தியில் ஓர் ஹீரோவாகத் தன்னைக் காட்டிக் கொள்வதற்காக வாயை வாடகைக்கு விட்டு இந்தியர்களின் ஓட்டு மதிப்பைக் குறைத்து மதிப்பிட்டிருக்கிறார்.

தேர்தல் காலத்தில் இந்தியர்கள் ஹீரோக்கள் 

ஒவ்வொரு பொதுத்தேர்தல் காலத்திலும் மலேசிய இந்தியர்கள் இந்நாட்டு அரசியல் கட்சிகளுக்கு மிகவும் வேண்டப்பட்டவர்களாக ஆகி விடுகின்றனர். கிட்டத்தட்ட ஹீரோக்களாக இந்திய வாக்காளர்கள் கருதப்படுகின்றனர். அவர்களின் ஓட்டுக்காக அவர்களின் பெருமையைப் பேசுவதை அரசியல்வாதிகள் நிறுத்திக் கொண்டதில்லை.

தேர்தல் காலத்தில் இந்தியர்களின் விசுவாசம், அவர்களின் உழைப்பு ஆகியவற்றை வாயாரப் புகழ்ந்து தள்ளும் அரசியல்வாதிகள் இந்த நாட்டின் இன்றைய உயர்வுக்கு  – வளர்ச்சிக்கு இந்திய சமுதாயம் ஆற்றியிருக்கும் பங்களிப்பு அளப்பரியது – அவர்களின் இந்த உழைப்பையும் பங்களிப்பையும் மதிக்க வேண்டும் என்று மேடைகளில் முழங்குவதிலும் தவறுவதில்லை.

இப்படி ஒன்று ஒரு பக்கம் நடந்து கொண்டிருக்க லொக்மான் போன்ற அரைவேக்காட்டு அரசியல்வாதிகள் இந்திய வாக்காளர்களின் மதிப்பைக் கொச்சப்படுத்தி வருகின்றனர். இந்திய வாக்காளர்களின் ஆதரவு இன்றி அம்னோ வேட்பாளர்களால்  முழுமையான வெற்றியைப்  பெற்றுவிட முடியுமா என்பதை லொக்மான் சிந்திக்க மறந்து விட்டார். 

நாடு சுதந்திரம் பெற்ற நாளில் இருந்து ஆளுங்கட்சிக்கு இந்தியர்கள் அளித்து வந்த வாக்குகள் மதிப்பிழந்ததன் காரணமாகவே ஆதரவு அலை வேறு பக்கம் திரும்பியது. இந்தியர்களைக் கிட்டத்தட்ட ஒரு செல்லாக்காசு என்றே லொக்மான் போன்ற அரசியல்வாதிகள் பிரச்சாரம் செய்யத் துணிந்து விட்டனர்.

கடுகு சிறியதுதான். ஆனால் காரம் வீரியம் மிகுந்தது. இந்தியர்கள் இந்த நாட்டில் சிறுபான்மையினர்கள்தாம். இவர்கள் எந்தத் தொகுதியிலும் பெரும்பான்மையாக இல்லை என்பதும் உண்மைதான். ஆனால் மற்ற இனத்தவர்கள் கைவிடும்போது இந்தியர்கள் மட்டுமே அம்னோவுக்கும் பாரிசான் நேஷனலுக்கும் கைகொடுத்து ஆட்சிப் பீடத்தில் அமர்த்தி இருக்கின்றனர் என்பது கல்வெட்டுகளில் பொறிக்கப்பட்ட வரலாற்று உண்மை.

இனம், சமயம் போன்றவற்றைத் தங்களின் ஆயுதங்களாகச் சுமந்து கொண்டிருக்கும் நாலாந்தர அரசியல்வாதிகளால் இந்த உண்மையை ஜீரணிக்க இயலாது. இதுதான் உண்மையும்கூட. 

பழுத்த அனுபவம் கொண்ட மிதவாத அரசியல்வாதிகளுக்கு இந்தப் பேருண்மை புரியும் என்ற நிலையில் இந்திய வாக்காளர்களை அவர்கள் எந்தச் சுழ்நிலையிலும்  புறக்கணிப்பதில்லை. தங்களுடைய வெற்றிக்கு இந்தியர்களின் வாக்குகள் தேவையில்லை என்று கூப்பாடு போடும் நாலாந்தர அரசியல்வாதிகள் தோல்வியைத் தழுவிய பின் இந்தியர்கள் தங்களை ஆதரிக்கவில்லை என்று ஒரு புதிய  கதையைக் கட்டவிழ்த்து விடுவர்.

இந்தியர்களின் ஆதரவு இன்றி கிட்டத்தட்ட 60 தொகுதிகளில் வெற்றிபெற முடியாது என்பதை லொக்மான் போன்ற நாலாந்தர அரசியல்வாதிகள் தெரிந்து – புரிந்து கொள்வது அவசியம். மலேசிய இந்தியர்களைப் பொறுத்தவரை அம்னோவையும் பாரிசான் நேஷனலையும் கைவிட்டு நீண்ட காலமாகிறது. இந்த நிலையில் இந்திய  வாக்காளர்களை லொக்மான் வம்புக்கு இழுக்க வேண்டிய அவசியமும் இல்லை.

யாருக்கு ஆதரவு? 

வரும்  6 மாநிலங்களின் சட்டமன்றத் தேர்தல்களில் எந்தக் கட்சிக்கு அல்லது எந்தக் கூட்டணிக்கு வாக்களிப்பது என்பதில் இந்திய வாக்காளர்கள் மிகவும் தெளிவாக இருக்கின்றனர். இந்த மாநில சட்டமன்றத் தேர்தல்களில் இந்தியர்களின் வாக்குகள் டான்ஸ்ரீ முஹிடின் யாசின் தலைமையிலான பெரிக்காத்தான் நேஷனல் கூட்டணிப் பக்கம்  திரும்பினாலும் ஆச்சரியப்படுவதற்கில்லை. அப்படித் திரும்பினால் லொக்மான் போன்ற அரைவேக்காடு அரசியல்வாதிகள்தாம் அதற்கு முழு காரணம்.

2022 நவம்பர் மாதம் நடைபெற்ற நாட்டின் 15ஆவது பொதுத்தேர்தலுக்குப் பின்னர் எந்தவொரு கூட்டணியும் தனித்தப் பெரும்பான்மை பெற முடியாத நிலையில் ஒற்றுமை அரசாங்கத்தை அமைத்து இன்று ஆட்சி நடத்தி வருகின்றனர்.

டத்தோஸ்ரீ அன்வார் இப்ராஹிம் தலைமையிலான பக்காத்தான் ஹராப்பான், டத்தோஸ்ரீ அமாட் ஸாஹிட் ஹமிடி தலைமையிலான பாரிசான் நேஷனல் ஆகிய இரண்டு கூட்டணிகளும் இந்த  ஒற்றுமை அரசாங்கத்தில்  பிரதான பங்காளிகளாக இருக்கின்றன. 

இந்தக் கூட்டணியால் மட்டும் இந்தியர்களின் ஆதரவு பக்காத்தான் ஹராப்பானுக்கோ பாரிசான் நேஷனலுக்கோ  திரும்பி விடும் என்பதற்கு எவ்வித உத்தரவாதமும் இல்லை. அம்னோவைச் சேர்ந்த ஒருவர் தொடர்ந்து தங்களை இழிவுபடுத்தி வருகின்ற நிலையில் மீண்டும் இந்தக் கூட்டணிக்கு வாக்களிக்க வேண்டுமா? என்ற கேள்வி இந்திய சமுதாயத்தைத் தட்டி எழுப்பிக் கொண்டிருக்கிறது.

ஒவ்வொரு முறையும் இந்திய சமுதாயம் இழிவுபடுத்தப்படுகிறது. இதனைச் செய்வோருக்கு இந்திய சமுதாயத்தின் ஆதரவு அவசியமா? என்ற கேள்வியும் எதிரொலிக்கவே செய்கின்றது.

இளம் வாக்காளர்கள் முடிவு செய்வர்

இன்று நிலைமை மாறுபட்டிருக்கிறது. இளம் வாக்காளர்கள் சிந்திக்கும் வல்லவர்களாக இருக்கின்றனர். இனத்தைச் சிறுமைப்படுத்துவோரை ஆதரிக்கக்கூடாது என்பதில் அவர்கள் மிகத் தெளிவாக இருக்கின்றனர். என்ன நடந்தாலும் பாரிசான் நேஷனலுக்குத்தான் தங்களின் ஓட்டு என்ற நிலை முற்றாக மாறிவிட்டிருக்கிறது.

இளம் வாக்காளர்கள் இந்த மாற்றங்களுக்குப் பிள்ளையார் சுழி போட்டிருக்கின்றனர். தங்களை இழிவுபடுத்துவோரை எதிர்த்து அவர்கள் வாய்ப்போர் நடத்தப்போவதில்லை. ஆனால் மௌனமாக ஒருவிரல் புரட்சி செய்து பாடம் புகட்டுவர் என்பது திண்ணம். 

இதனால் லொக்மான் போன்ற அரசியல்வாதிகள் நாகரிகம் கருதி மற்ற இன வாக்காளர்களைச் சிறுமைப்படுத்துவதையும் கேலி செய்வதையும் நிறுத்திக்கொள்ள  வேண்டும். தவறினால் இருப்பதையும் இழக்க வேண்டி இருக்கும். 

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here