கோலாலம்பூர், டிசம்பர் 14 :
இங்கு ஸ்தாபாக்கில் உள்ள ஒரு குடியிருப்பில் நடந்ததாகக் கூறப்படும், சண்டை குறித்து போலீசார் விசாரணையைத் தொடங்கியுள்ளனர்.
முகநூலில் பதிவேற்றம் செய்யப்பட்ட அந்த இரண்டு நிமிடம், 10 வினாடிகள் கொண்ட காணொளியை போலீசார் கவனித்ததாகவும் அது தொடர்பில் விசாரணையை ஆரம்பித்துள்ளதாகவும் வங்சா மாஜு மாவட்ட காவல்துறை தலைமை கண்காணிப்பாளர் அஷாரி அபு சாமா தெரிவித்தார்.
“ஒரு ஆடம்பர அடுக்குமாடிக் குடியிருப்பில் மூன்று உள்ளூர் ஆண்கள் சம்பந்தப்பட்ட ஒரு சண்டை சம்பவத்தை காணொளி காட்டுகிறது.
“இது சம்பந்தமாக, வங்சா மாஜு மாவட்ட காவல்துறை தலைமையகத்தின் (ஐபிடி) குற்றப் புலனாய்வுப் பிரிவு குற்றவியல் சட்டத்தின் 323 வது பிரிவின்படி பதிவிடப்பட்ட காணொளி குறித்து விசாரணை நடத்தி வருகிறது” என்று அவர் இன்று ஒரு அறிக்கையில் தெரிவித்தார்.
வழக்கு தொடர்பான தகவல் தெரிந்த பொதுமக்களை 03-92899222 என்ற எண்ணில் வங்சா மாஜு மாவட்ட காவல்துறை தலைமையகம் (IPD) அல்லது கோலாலம்பூர் காவல்துறையின் ஹாட்லைன் 03-21159999 அல்லது அருகிலுள்ள ஏதேனும் காவல் நிலையத்தைத் தொடர்புகொள்ளுமாறு அவர் கேட்டுக் கொண்டார்.
முகநூலில் பதிவிடப்பட்ட காணொளியில் வீட்டின் மறு சீரமைப்பில் திருப்தியடையாதவர்கள் என்று நம்பப்படும் இரண்டு ஆண்கள் ஒரு ஆடவரை பலமுறை அடித்து, உதைப்பதைக் காட்டியது, அவர்கள் மற்ற இரண்டு நபர்களால் தடுக்கப்பட்டனர், ஆனால் அவர்களும் திட்டப்பட்டதை அக்காணொளி காட்டியது குறிப்பிடத்தக்கது.





















