ஜோகூர்-சிங்கப்பூர் புதிய படகுச் சேவை; 3 இலட்சம் பேர் பயனடைவர்

ஜோகூர் பாரு:

சிங்கப்பூருக்கும் ஜோகூருக்கும் இடையில் பொதுப் போக்குவரத்து இணைப்பை மேம்படுத்தும் நோக்கத்தில் ஒரு புதிய படகுச் சேவையை தொடங்குவது குறித்த சாத்தியம் பற்றி, ஜோகூர் மாநில மந்திரி பெசார் மற்றும் சிங்கப்பூரின் போக்குவரத்து அமைச்சரும் அண்மையில் நடந்த சந்திப்பில் விவாதித்தனர்.

சிங்கப்பூரின் போக்குவரத்து அமைச்சர் எஸ் ஈஸ்வரனும் ஜோகூர் மந்திரி பெசார்ஓன் ஹஃபிஸ் காஸியும் ஜோகூருக்கும் சிங்கப்பூருக்கும் இடையில் போக்குவரத்தை மேம்படுத்துவதற்கான வழிகள் பற்றி ஆராய்ந்தனர்.

ஜோகூர் மந்திரி பெசார் சிங்கப்பூருக்கு மேற்கொண்ட கடந்த சனிக்கிழமை முடிவடைந்த, மூன்று நாள் அதிகாரபூர்வ பயணத்தில் இது பற்றி விவாதிக்கப்பட்டது.

ஜோகூர் பாருவில் இஸ்கந்தர் புத்ரியில் உள்ள புத்ரி துறைமுக அனைத்துலக முனையத்தில் இருந்து சிங்கப்பூரில் உள்ள துவாசுக்குப் படகுச் சேவையை அறிமுகப்படுத்தும் சாத்தியம் பற்றி தாங்கள் விவாதித்ததாக ஜோகூர் முதல்வர் தெரிவித்தார்.

அத்தகைய ஒரு சேவை ஜோகூருக்கும் சிங்கப்பூருக்கும் இடையில் பொதுப் போக்குவரத்து இணைப்பை மேம்படுத்தும் என்றும் அவர் கூறினார்.

ஜோகூருக்கும் சிங்கப்பூருக்கும் இடையில் போக்குவரத்துக்கு நிலத்தைச் சார்ந்திருப்பதை அந்தச் சேவையின் மூலம் குறைத்துக் கொள்ளலாம்.

அதோடு மட்டுமன்றி, அத்தகைய ஒரு படகு சேவையின் மூலம் வர்த்தகத் துறையில் தளவாடப் போக்குவரத்துக்குக் கணிசமான அளவுக்குப் பலன்கள் ஏற்படும். அது இரு நாட்டு மக்களுக்கும் நன்மை பயக்கும் என்று அவர் குறிப்பிட்டார்.

அத்தகைய ஒரு படகுச் சேவை பற்றி முதன்முதலாக இந்த ஆண்டு தொடக்கத்தில் விவாதிக்கப்பட்டது.

அதற்குப் பிறகு அந்தச் சேவை பற்றி தாங்கள் இருவரும் ஆழமாக விவாதித்ததாக முதல்வர் குறிப்பிட்டார்.

அந்தத் திட்டம் எப்போது தொடங்கும் என்பதற்கான திட்டவட்டமான தேதியைத் தெரிவிக்க இப்போது தன்னால் இயலவில்லை என்று குறிப்பிட்ட முதல்வர், அதன் தொடர்பில் பல பிரச்சினைகளுக்குத் தீர்வுகாண வேண்டி இருக்கிறது என்றார்.

சிங்கப்பூருக்கும் ஜோகூருக்கும் இடையிலான போக்குவரத்துக்கு ஜோகூர் தரைப்பாலமும் இரண்டாவது இணைப்புப் பாலமும் இப்போது மிக முக்கிய தரை வழிகளாக இருக்கின்றன.

ஜோகூர் தரைப்பாலம் வழியாக ஜோகூரில் இருந்து அன்றாடம் 300,000க்கும் மேற்பட்டவர்கள் சிங்கப்பூருக்கு வந்து செல்கிறார்கள் என்பது குறிப்பிடத்தக்கது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here