சமையல் எண்ணெய்க் கடத்தலுக்கு எதிராக கடுமையான நடவடிக்கை; அமைச்சு எச்சரிக்கை

புத்ராஜெயா, ஜூலை 13-

ஒரு கிலோ எடையுடைய உதவித்தொகை பெற்ற சமையல் எண்ணெய் பாக்கெட்டுகள் அண்டை நாடுகளுக்கு விற்பனை செய்யப்பட்டு வருவதை உள்நாட்டு வாணிப, வாழ்க்கைச் செலவினத்துறை அமைச்சு கடுமையாகக் கருதுவதாகத் தெரிவித்துள்ளது.

இவ்விவகாரம் குறித்து அண்டை நாடுகள் உட்பட நாடு முழுவதும் அமைச்சின் அமலாக்கப் பிரிவு அதிகாரிகள் கடுமையான சோதனை நடவடிக்கைகளை மேற்கொண்டு வருவதாக அந்த அமைச்சு நேற்று வெளியிட்ட ஓர் அறிக்கையில் குறிப்பிட்டுள்ளது.

சமையல் எண்ணெய்யைத் தயாரிக்கும் தொழிற்சாலை, அவற்றைப் பாக்கெட்டுகளில் அடைக்கும் தொழிற்சாலை உட்பட மொத்த விற்பனையாளர், சில்லறை வியாபாரிகள் உட்பட அனைவரிடமும் சோதனை மேற்கொள்ளப்படும் என அது கூறியது.

கடந்த 5 ஆண்டுகளாக அமைச்சு மேற்கொண்ட சோதனை நடவடிக்கையில் 2019ஆம் ஆண்டு முதல் 30.6.2023ஆம் தேதி வரை சமையல் எண்ணெய்யைக் கடத்தியதாக 730 சம்பவங்கள் அடையாளம் காணப்பட்டன.

அவர்களிடம் இருந்து ஒரு கோடியே 67 லட்சத்து 90 ஆயிரம் ரிங்கிட் பெறுமானமுள்ள சமையல் எண்ணெய் பாக்கெட்டுகள் பறிமுதல் செய்யப்பட்டதாக அந்த அறிக்கை கூறியது.

இவ்வாண்டு ஜனவரி முதலாம் தேதியில் இருந்து மின் வர்த்தக முறையைத் தமது அமைச்சு அறிமுகப்படுத்தியுள்ளது. தொழிற்சாலைகள், மொத்த விற்பனையாளர்கள், சில்லறை வியாபாரிகள், சமையல் எண்ணெய் பதுக்கல், அண்டை நாட்டவர்களிடம் எண்ணெய் பாக்கெட்டுகளை விற்பனை செய்வது போன்ற நடவடிக்கைகளுக்கு எதிராக கடுமையான நடவடிக்கை
எடுக்கப்படும்.

அதேவேளையில் நாடு முழுவதும் சமையல் எண்ணெய்யை மின் வர்த்தகம் செய்யும் 354 சமையல் எண்ணெய் உற்பத்தி தொழிற்சாலைகளில் சோதனைகளை மேற்கொள்ள அமைச்சின் அமலாக்கப் பிரிவு அதிகாரிகளுக்கு உத்தரவிடப்பட்டதாக அந்த அறிக்கை கூறியது.

இவ்விவகாரம் தொடர்பாக உள்நாட்டு வாணிப, வாழ்க்கைச் செலவினத்துறை அமைச்சு சுங்கத்துறை, உள்நாட்டு வருமான வரி வாரியம், ராணுவம், போலீஸ், பொது நடவடிக்கைப் பிரிவு, கடற்படை ஆகியவற்றுடன் ஒத்துழைத்து வருவதாகவும் அது கூறியது.

கடந்த 2019ஆம் ஆண்டு முதல் இவ்வாண்டு ஜூன் 30ஆம் தேதி வரை 227 இடங்களில் திடீர் சோதனையை மேற்கொண்டபோது 65 லட்சத்து 83 ஆயிரத்து 970 ரிங்கிட் மதிப்புள்ள சமையல் எண்ணெய் பறிமுதல் செய்யப்பட்டதாகவும் அந்த அறிக்கை கூறியது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here