ஒற்றுமை அரசாங்கத்திற்கான இந்தியர்களின் ஆதரவு தொடரட்டும் பிரதமர் வலியுறுத்தல்

கோலாலம்பூர், ஜூலை 17-

* பரம ஏழ்மையில் இருந்து மக்களை விடுவிப்பதே மிக முக்கியம்

* இந்திய சமூகத்தின் ஆதரவு மிகவும் பாராட்டுக்குரியது

* அனைவருக்கும் உரிமைகள் கிடைக்க வேண்டும் என்பதே அரசின் நிலைப்பாடு

எனது தலைமையிலான ஒற்றுமை அரசாங்கத்திற்கு இந்திய சமூகத்தினர் தொடர்ந்து ஆதரவு வழங்க வேண்டும் என பிரதமர் டத்தோஸ்ரீ அன்வார் இப்ராஹிம் கேட்டுக் கொண்டார்.

திட்டமிடப்பட்ட அனைத்து மேம்பாடுகளும் நிறைவேற்றப்படுவதை உறுதி செய்வதற்கு இந்திய சமூகத்தின் ஆதரவும் அரசாங்கத்திற்குத் தேவைப்படுகிறது என்று அவர் கூறினார்.

சில தரப்பினரின் குறுகிய இனவாதத் தன்மையை நாம் எதிர்த்துப் போராட வேண்டும். இதுபோன்ற  குறுகிய இனவாதத்தை நாம் தவிர்க்கவும் வேண்டும் என்று அவர்  கேட்டுக் கொண்டார்.

அதற்கு மாறாக ஏழ்மை நிலையில் இருந்து விடுபடுதல் போன்ற இன்னும் முக்கியமான விஷயங்களில் நாம் முழுக் கவனம் செலுத்தவேண்டியது அவசியம் என்றும் பிரதமர் சுட்டிக்காட்டினார்.

இதுவரை ஒற்றுமை அரசாங்கத்திற்கு இந்திய சமூகத்தினர் அளித்து வரும் ஆதரவு மிகவும் பாராட்டுக்குரியது என்று அவர் நேற்று தனது முகநூல் பதிவில் குறிப்பிட்டுள்ளார்.

இந்த ஆண்டில் நிர்ணயிக்கப்பட்டதைப்போல பரம ஏழ்மை நிலையை ஒழிக்கும் ஒற்றுமை அரசாங்கத்தின் முயற்சி ஓர் இனத்திற்காக மட்டும் கவனம் செலுத்துவதாக அமையாது என்றும் இதற்கு முன் அன்வார் கூறியிருந்தார்.

ஒற்றுமை அரசாங்கத்தின் நிலைப்பாடு மிகவும்  தெளிவானது. கூட்டரசு அரசியலமைப்புச் சட்ட விதிகளுக்கேற்ப இந்த நாட்டில் உள்ள அனைவருக்கும் அவரவர் உரிமை கிடைப்பதை உறுதி செய்வதுதான் ஒற்றுமை அரசாங்கத்தின் நிலைப்பாடு என்றும் அன்வார் திட்டவட்டமாகக் கூறியிருக்கிறார். 

 

 

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here