செபெராங் பிறை, ஜூலை 18-
தொழில்நுட்பம், தொழிற்கல்விப் பயிற்சித் (திவெட்) திட்டத்தில் இந்திய மாணவர்களின் நுழைவு அதிகரிக்கப்படும் எனப் பிரதமர் டத்தோஸ்ரீ அன்வார் இப்ராஹிம் உறுதியளித்துள்ள நிலையில் வாய்ப்புகள் சரிவரச் சென்றடையுமா? அவை முறையாகப் பயன்படுத்திக்கொள்ளப்படுமா என்ற எதிர்பார்ப்பு பரவலாக எழுந்துள்ளது.
நேற்று முன்தினம் அரேனா செபெராங் பிறையில் நடைபெற்ற பினாங்கு வாழ் இந்தியர்களுடனான சந்திப்பு நிகழ்ச்சியில் உரையாற்றும்போது பிரதமர் இந்த உறுதியை வழங்கியிருந்தார்.
இந்தியர்கள் மத்தியில் வறுமை நிலையைக் குறைப்பதற்கான முயற்சிகளுள் இந்த முன்னெடுப்பும் ஓர் அம்சமாக அமைகின்றது.
இது குறித்து தேசிய திவெட் மன்றச் செயற்குழுத் தலைவரான துணைப்பிரதமர் டத்தோஸ்ரீ டாக்டர் அமாட் ஸாஹிட் ஹமிடி தமக்குத் தகவல் கூறியதாகப் பிரதமர் டத்தோஸ்ரீ அன்வார் இப்ராஹிம் தெரிவித்தார்.
இந்திய மாணவர்கள் திவெட் பயிற்சித் திட்டத்தில் ஈடுபட அதிக எண்ணிக்கையில் வாய்ப்பு வழங்கப்பட வேண்டும் எனக் கோரிக்கை முன்வைக்கப்பட்டுள்ளதாக ஸாஹிட் ஹமிடி என்னிடம் கூறினார்.
திவெட் பயிற்சியில் இந்திய மாணவர்களின் எண்ணிக்கை குறித்த தரவுகளை நான் இன்னும் பெறவில்லை. ஆனாலும் அவர்களின் நுழைவை அதிகரிப்பதற்கான முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றது.
இந்நிலையில் இந்திய – சீன மாணவர்கள் பலரும் சிறப்பான அடைவுநிலையைப் பெறுகின்ற போதிலும் மெட்ரிகுலேஷன் கல்வி பயில்வதற்கு இடம் வழங்கப்படுவதில்லை என புகார்கள் முன்வைக்கப்படுவது குறித்தும் கருத்துரைத்த பிரதமர் இவ்விவகாரத்திற்குத் தீர்வு காணும் நடவடிக்கைகளைக் கல்வி அமைச்சர் ஃபட்லினா சிடேக் முன்னெடுத்து வருவதாகக் கூறினார்.
நம் நாட்டில் மெரிதோகிராசி, கல்வி நுழைவுக்கான ஜனநாயகம் ஆகிய 2 கொள்கைகள் உள்ளன. இவ்விரண்டு கொள்கைகளையும் நாம் சமநிலையில் பின்பற்ற வேண்டும். எனவே அறிக்கை வெளியிடுவதையும் குரலெழுப்பதையும் தவிர்த்துவிட்டு இன்னும் ஓரிரு வாரங்களில் இவ்விவகாரம் குறித்து முழு அறிக்கையைப் பெற்று அதற்குத் தீர்வு காண வேண்டும் என நான் ஃபட்லினா சிடேக்கிடம் கூறியுள்ளேன்.
இந்நாட்டில் அன்வார் மலாய்க்காரர்களை விடுத்து மற்ற இனத்தவர்களின் உரிமையைத் தற்காக்கத்தான் போராடுகிறார் என எதிர்க்கட்சியினர் கடுமையான குற்றச்சாட்டினை முன்வைத்தாலும் அனைத்து மக்களின் உரிமைகளுக்கு மதிப்பளிக்க வேண்டும் என்ற நிலைப்பாட்டினை என் தலைமையிலான அரசாங்கம் கொண்டிருக்கிறது. இது மிகவும் அடிப்படையான கொள்கையாகும்.
நாட்டில் மத – இனத்துவேஷ கொள்கைகளுக்கு இடமளிக்காமல் இருப்பதற்கு நாம் ஆக்கப்பூர்வமாகப் பாடுபட வேண்டும் எனவும் அன்வார் கேட்டுக்கொண்டார். இந்நிலையில் 20 ஆண்டுகளாகத் தேசிய அரசியல் அரங்கில் இருந்து ஒதுக்கப்பட்ட கடுமையான காலகட்டத்திலும் தமக்கு வலுவான ஆதரவு வழங்கிய இந்திய சமூகத்திற்கும் பிரதமர் நன்றி தெரிவித்துக்கொண்டார்.