சிங்கப்பூரில் மீட்கப்பட்ட அருகிவரும் இன ஆமைகள் நேற்று மீண்டும் மலேசியா வந்தடைந்தன

சிங்கப்பூரில் மீட்கப்பட்ட அருகிவரும் இனத்தைச் சேர்ந்த மூன்று ஆமைகள்  நேற்று  திரும்ப மலேசியா  வந்தடைந்தன.

சட்டவிரோத வர்த்தகர்கள் இறைச்சிக்காகவோ, செல்லப் பிராணிகளாக விற்பதற்காகவோ பிடிக்கும் வனவிலங்குகளைக் காப்பாற்றி, அவற்றுக்கு மறுவாழ்வு கொடுத்து, மீண்டும் சொந்த நாட்டுக்கே திரும்ப அனுப்பும் சிங்கப்பூரின் ஏக்கர்ஸ் எனப்படும் விலங்கு நல ஆய்வு, கல்வி அமைப்பு மேற்கொண்ட முயற்சிகளின் அடிப்படையில் அவை மீளவும் நாட்டிற்கு வந்தடைந்தன.

முதலில், மலேசியாவைச் சேர்ந்த இராட்சத ஆமை ஒன்று 2019ஆம் ஆண்டு டிசம்பரில் சிங்கப்பூரின் சுங்கை பூலோ ஈரநில வனப்பகுதியில் கண்டுபிடிக்கப்பட்டது.

ஏக்கர்ஸ் அதற்கு ‘ஜேஸ்மின்’ என்று பெயர் சூட்டியது. அத்தகைய ஆமைகள் இந்தோனேசியாவிலும் மலேசியாவிலும் காணப்படுகிறது. அந்த ஆமை 2020ஆம் ஆண்டில் அருகிவரும் அபாயம் அதிகமுள்ள ஆமைகள் பட்டியலில் சேர்க்கப்பட்டது.

இரண்டாவது ஆமை, இராட்சத ஆசிய குள ஆமை. அதனை ஏக்கர்ஸ் 2020ஆம் ஆண்டு ஜூலை மாதம் சேட்ஸ்வொர்த் டிரைவில் மீட்டெடுத்தது. அதற்கு ‘ஜீனி’ என்று பெயர் சூட்டப்பட்டது. கம்போடியா, லாவோஸ், மலேசியா, மியன்மார், தாய்லாந்து, வியட்நாம் ஆகிய நாடுகளில் காணப்படும் அது, 2021ஆம் ஆண்டில் அருகிவரும் அபாயம் அதிகம் உள்ள ஆமைகள் பட்டியலில் சேர்க்கப்பட்டது.

மூன்றாவது ஆமை, ‘சலீன்’ என்ற பெயர் கொண்ட ‘பிளாக் மார்ஷ்’ ஆமை வகையைச் சேர்ந்தது. அது 2022ஆம் ஆண்டு ஜனவரி மாதத்தில் வீடமைப்பு வளர்ச்சிக் கழகப் பேட்டை ஒன்றில் கண்டுபிடிக்கப்பட்டது. அதுவும் 2021ஆம் ஆண்டில் அருகிவரும் அபாயம் அதிகம் உள்ள ஆமைகள் பட்டியலில் சேர்க்கப்பட்டது.

இந்நிலையில், தடைசெய்யப்பட்ட வனவிலங்குகளை வைத்திருக்கவோ, விற்கவோ, வாங்கவோ கூடாது என்று பொதுமக்களுக்கு நினைவூட்டப்படுகிறது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here