இலக்கு தரும் இலக்கியம்

 

கோலாலம்பூர் தான்ஸ்ரீ சோமா அரங்கத்தில் அண்மையில் நடைபெற்ற, இலக்கியம் பேசுவோம் வாரீர்….என்ற நிகழ்ச்சியில் காவல்துறை கமிஷனர் டத்தோஸ்ரீ தெய்வீகன் ( ஓய்வு) ஆற்றிய உரையின் சுருக்கம்.

இலக்கை இயம்புவது இலக்கியம். இலக்கு என்றால் என்ன? குறி, குறிக்கோள் அல்லது நோக்கம். எல்லோருடைய வாழ்க்கையிலும் ஒரு குறிக்கோள் வேண்டும். எந்தக் காரியத்தைச் செய்தாலும் அதில் ஒரு நோக்கம் வேண்டும்.

குறிக்கோளும், நோக்கமும் இல்லாத வாழ்வு, உயர்திணை வாழ்வு அல்ல. பிராணிகள், மிருகங்களின் வாழ்க்கையில் குறிக்கோள் கிடையாது. உண்பதும், புணர்வதும், உறங்குவதும்தான் அவைகளின் வாழ்க்கை. இருப்பினும், பறவைகள் அதிகாலையில் பறந்து சென்று உணவு தேடுவதும்: முட்டை இடவும், குஞ்சி பொரிக்கவும் கூடு கட்டுவதும் ஒருவகையான குறிக்கோள்தான்.

மனித குலம் அவ்வாரல்ல. அதையும் தாண்டி, அன்பு அறம், அறிவு, ஆற்றல், பண்பு, கலை, கலாச்சரம் என்று பல குறிக்கோள்களை உடையது. இதெல்லாம் ஒன்றும் இல்லாமல், கற்கால மனிதர்களாய் வாழ்ந்த காலம் ஒன்றிருந்தது. ஆனால், மனித சிந்தனை வளர வளர, மனித செயல்பாடுகள் நாகரிகம் அடைந்து, அறிவாற்றல் நிறந்து வாழ்க்கை செம்மை அடைந்தது; ஆனால் இன்னும் நிறைய அடையவேண்டியுள்ளது.

இதில் பெருமைப்பட வேண்டிய ஒரு விஷயம் என்னவெனில், உலகமக்கள் பெரும்பாலோர் கற்காலத்திலும், குகைகளுக்குள்ளும் வாழ்ந்து கொண்டிருந்த போதே, தமிழ்ச் சமுதாயம் வாழ்க்கையின் இலக்கை நன்கறிந்த மனித நாகரீக மிக்கவர்களாகவும், அறிவார்ந்தவர்களாகவும் பரவியும் விரவியும் தங்கள் அனுபவத்தையும் அறிவாற்றலையும், வகுத்தும் தொகுத்தும் மக்களுக்கு வழங்கினார்கள்.

தமிழ்ச்சங்கம் என்பது வெறும் மொழிக்காக மட்டுமல்லாமல், தமிழர் வாழ்க்கை நெறி, வாழ்க்கையின் குறிக்கோள், தமிழர் வாழ்க்கையின் அடிப்படைத் தத்துவம், உலகத்தோடு ஒட்டி வாழ்வதும்; வையத்தில் வாழ்வாங்கு வாழ்வதும் எப்படி என்று, குன்றின்மேலிட்ட குத்துவிளக்குப் போல், அறிவொளிகாட்டி தெளிவித்தனர்.

அகத்தியம், தொல்காப்பியம், திருமந்திரம், திருக்குறள், சிலப்பதிகாரம், திருவாசகம், ஔவையின் நீதி நூல்கள், நாலடியார், திரிகடுகம், பஞ்சமூலம், பாரதி, வள்ளலார் என்று பன்னெடும் தமிழ்ச்சான்றோர், தமிழ் இலக்கியத்தின் வழி, தமிழரின் உன்னத உலக வாழ்க்கைக்கு இலக்கு அமைத்தனர். அந்த இலக்கை அடையும் எளிய வழியையும் காட்டிப் போயினர். இத்தகைய செம்மொழிச் சான்றோர்கள், தமிழ் மொழிக்கு மட்டும் இலக்கணம் வகுக்கவில்லை; தமிழர் வாழ்க்கையின் ஒட்டுமொத்த வாழ்விற்கும், ஒவ்வொரு துறைக்கும், இலக்கணம் வகுத்தனர்.

ஆணுக்கு இலக்கணம்; பெண்ணுக்கு இலக்கணம்; பெற்றோருக்கு இலக்கணம்; குழந்தைக்கு இலக்கணம்; ஆசிரியர்க்கு இலக்கணம்; மாணவர்க்கு இலக்கணம் ; கல்விக்கு இலக்கணம் கவிதைக்கு இலக்கணம்; காதலுக்கு இலக்கணம்; நீதிக்கு இலக்கணம்; மன்னனுக்கு இலக்கணம்; மந்திரிக்கு இலக்கணம்; போருக்கு இலக்கணம்; எப்படி பேசுவது;
எப்படி சிரிப்பது, எப்படி உண்பது; எப்படி நாம் வாழும் உலகின் இயற்கையை நேசித்துப் பாதுகாப்பது என்றெல்லாம் இலக்கணம் வகுத்தார்கள்.

பக்திக்கு ஒர் இலக்கணம்; பல்லுயிர் ஓம்புவதற்கோர் இலக்கணம்; பொருளீட்ட ஒர் இலக்கணம் என்று, வையத்தில் வாழ்வாங்கு வாழத் தேவையான அத்தனைக்கும் இலக்கணம் வகுத்த மகாவுபாத்தியாயர்கள் நிறைந்த இந்த தமிழச் சமுதாயம் ஏன் இன்னும், அறியாமை நிறைந்த கும்மிருட்டிலேயே வாழ ஆசைப்படுவது, ஆச்சரியத்திற்குரிய பெரும் புதிராகவே இருக்கிறது.

அறம், பொருள், இன்பம், வீடு என்று, வாழ்க்கையின் பயன்; நோக்கம்; குறிக்கோள்,; இலக்கை, வேறு இன-மொழிகளிலான இலக்கியங்களில் காண்பதறிது. இதன் பெருமையை நாம் அறிந்துள்ளோமா? எங்கும் அறியாமையும், புரியாமையும், தெரியாமையும் கொக்கரித்து, கும்மாளம் இட்டுக்கொண்டு, தலைவிரித் தாடுகின்றது.

இலக்கு தரும் இலக்கியங்கள் ஒன்றிரண்டைக் காண்போம்.

உலகம் பல நாடுகளாக, தேசங்களாக, பல இனங்களாக, பலவித கலச்சாரங்களாக பிரிந்திருந்தாலும், அனைவரும் ஒற்றுமையாக வாழவேண்டும்; போர் இல்லாமல், சண்டைகளும் சச்சரவுகளும் இன்றி, பரஸ்பர அன்பும் பரிவும் எங்கும் வியாபித்திருக்கவேண்டும் என்று முதல் முதலாக, 2000 ஆண்டுகளுக்கு முன்பே, உலக ஒற்றுமை என்ற இலக்கை சிந்தித்தவன், கணியன் பூங்குன்றனார் என்ற தமிழ் சிந்தனையாளன்.

*யாதும் ஊரே யாவரும் கேளீர்* என்றான். இதற்கு இணையான சிந்தனையை வேறெங்கும் காண்பது அரிது. (கண்டோர் தெளிவுறுத்துக). உலகம் அனைவருக்கும் சொந்தம்; அனைவரும் ஒரு குடும்பத்தின் உற்றார் உறவினர் போல ஒன்றுபட்டு வாழவேண்டும் என்பதுதான் இலக்கு. என்ன ஒரு அற்புதமான தமிழர் சமுதாய தத்துவக் கொள்கை!

*யாதானும் நாடாமால், ஊராமால் என்னொருவன் சாந்துணையும் கல்லாதவாறு?.* இவ்விலக்கியம் கூறும் இலக்கென்ன?

எல்லா நாடும் நமதே; எல்லா ஊரும் நமதே! எப்பொழுது? பிற நாட்டிற்குத் தேவையான கல்வி அறிவும், நன்னடத்தையும் இருந்தால், உலகின் எந்த நாட்டிலும் வாழலாம். வெற்றிபெறலாம். எம்மொழியையும் தூற்றாமல், பழமொழிகளின் தேர்ச்சி இருந்தால் அம்மொழி பேசும் நாட்டிற்குச் சென்று திரவியம் தேடலாம். வேற்றுமொழி, வேற்று கலை, கலாச்சாரம் அனைத்தையும் அறிவதுதான் கல்வி. அத்தகைய கல்விதான் நமது இலக்கு. அதற்காக நமது தாய்மொழியை மறந்துவிடக்கூடாது. மாற்றாந் தாயை போற்றவேண்டும். ஈன்ற தாய்க்கு இணையுண்டோ? மறந்துவிடக்கூடாது.

அதுமட்டுமல்ல. *சாந்துணையும் கல்லாதவாறு* என்றால் என்ன? வாழ்க்கைக்கு, கல்விதான் அதிமுக்கியம் என்று அறிந்தும், சாகும்வரை கல்லாமலேயே இருக்கின்றார்களே? எத்தகைய மூடர்கள் இவர்கள்? இலக்கறியா மழக்குகள்!

ஒரு ஆடவனின் இலக்கு என்ன? *வினையே ஆடவர்க்கு உயிரே* கல்விக்குப் பின், உழைப்புதான் ஒரு ஆடவனின் வெற்றிக்கு அடித்தளம். உழைப்பு தான் உயிரைப் போல் போற்றப் படவேண்டியது. உழைப்பனுக்கு, *தெய்வம் மடிதற்று தான் முந்துரும்* அதாவது, உழைப்பவனுக்கு உதவவேண்டி, தெய்வம் கூட, தன் வேட்டியைத் தூக்கி, இறுகக் கட்டிக்கொண்டு, நான் வந்து உதவி செய்கிறேன் என்று முன்னுக்கு ஓடிவருமாம். ஆக, அயராத உழைப்புதான் ஆடவரின் இலக்காக இருக்கவேண்டும்.

பெற்றோர்களின் இலக்கு என்ன? குழந்தையைப் பெற்றுத் தருவது தாயின் கடன். *ஈன்று புரந்தருவது என்தலைக் கடனே* அதற்காக அவள் அடைந்த இன்னலும் துன்பமும் எண்ணில் அடங்கா. *அவனைச் சான்றோனாக்குதல் தந்தையின் கடனே* பெற்றக் குழந்தையை அறிவும் ஆற்றலும் உடையவனாக்குதலும், நாட்டுப்பற்றும், நன்னடத்தையும் உடையவனாக்குதல் தந்தையின் இலக்காக இருக்கவேண்டும் என்கிறது இலக்கியம்.

சங்க காலத்தில், போர்க்கல்வியும், கூரிய வேல், மற்றும் போர்க்கருவிகளை பயன்படுத்தும் திறன்வேண்டும். இந்த ஆற்றலை கற்பிப்பதில் வல்லவர்கள் உண்டு. அதில், *வேல்வடித்துக் கொடுத்தல் கொல்லற்குக் கடனே* என்கிறது இலக்கியம். வேல் எப்படி இருக்கும்? நுனியில் கூர்மையாகவும்; அகன்றும், நீண்டு ஆழமாகவும் இருக்கவேண்டும். இன்று, கொல்லற்குச் சமமானவர்கள் ஆசிரியப் பெருந்தகைகள். மாண்வர்களுக்கு கல்வி கற்பித்து, அறிவூட்டுவதும் அப்படித்தான். மாணவர்களின் அறிவும், கூர்மையாகவும், அகன்றும், ஆழ்ந்தும் இருக்கும்படி பயிற்றுவிக்கவேண்டும். அதோடு, மாணவர்களில் பல வகை இனம் உண்டு என்று அன்றே ஆராய்ந்து வகை செய்துள்ளனர்.

ஒரு முறை சொன்னாலே புரிந்து கொள்பவன், ஏக சந்த கிரகி இருமுறை சொன்னால் மட்டும் புரிந்துகொள்பவன் துவி சந்த கிரகி. மூன்று முறை சொன்னால் மட்டும் புரிந்துகொள்பவன் திரிசந்த கிரகி. இதையும் மீறி, பல சந்த கிரகிகளும் உண்டு. பத்துமுறை சொன்னாலும் புரியாதவர்கள் உண்டு. இருப்பினும், ஓதாமல் ஒரு நாளும் இருக்கவேண்டாம் என்றும்; பிச்சைப் புகினும் கற்கை நன்றே என்றும்; கற்றவர் என்பவரே இருகண்ணுடையோர் என்றும் மாணவர்களுக்கு அறிவுறுத்த வேண்டும்.

ஆசிரியப் பெருந்தகைகள் தளர்ந்துவிடக் கூடாது. பொறுமையுடன் போதித்தால், கசடனும் கல்விமான் ஆவான். *பூவாதே காய்க்கும் மரம் போல்வரும் உண்டு; தூவா விதைத்தாலும் நன்றாக வித்தெனவே* போல்வாரும் உண்டு. மாதா, பிதாவைப் போல், தெய்வம் போன்றவர் குரு. ஒரு நாட்டின் மன்னன், அல்லது அரசின் இலக்கென்ன? இலக்கியம் என்ன சொல்கிறது?

நாள்தோறும் நாடி முறை செய்யவேண்டும் என்கிறது! மக்களின் பிரச்சினைகளை ஒவ்வொரு நாளும் உடனுக்குடன் சரிசெய்யவேண்டும் என்கிறது. அப்படி செய்யாவிட்டால், நாடும் மக்களும் கெட்டுக் குட்டிச் சுவராவதோடு, அரசும் கெட்டு நாசமாகும். அதே வேளையில், தானும் எவ்வித குற்றமும் இன்றி, தன் குடிகளைக் காப்பவனை, எல்லோரும் சுற்றிச் சுற்றிவந்து போற்றி மகிழ்வார்கள். *குற்றம் இலனாய் குடிசெய்து வாழ்வானை, சுற்றமாய்ச் சுற்றும் உலகு*

இத்தனைக்கும் மேலாக இன்னும் ஆயிரம் வகையில் வாழ்வின் இலக்குகளை, இலக்கியங்கள் தன்னுள்ளே பொதிந்து வைத்திருக்கின்றன. இவையெல்லாம் வேறொரு மொழியில், வேற்றாருக்குச் சொந்தமாக இருந்திருந்தால்; அவர்கள்தாம் இன்றைய உலகினை அரசாளும் அதிமுக்கிய இனமாக இருப்பார்கள். உலகினுக்கு தலைமை ஏற்று வழிகாட்டும் ஆட்சிபீடத்தில் இருப்பார்கள். ஆனால், நமது நிலை கேள்விக்குறியாக இருக்கின்றது. எத்தர்களும் பித்தர்களும் கூட எள்ளிநகையாடும் நிலைக்கு நாமே நம்மை இட்டுச் செல்கிறோம்.

இலக்கறியாக் காரணத்தினாலே,

*குருட்டினை நீக்கும் குருவினைக் கொள்ளார். குருட்டினை நீக்காக் குருவினைக் கொல்வர். குருடும் குருடும் குருடாட்டம் ஆடி, குருடும் குருடும் குழிவிழுமாறே*

சிந்திப்போம் தோழர்களே.

அன்புடன்.
தெய்வீகன் ஆறுமுகம்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here