இரு மோட்டார் சைக்கிள் குழுக்களுக்கிடையே மோதல்- எண்மர் கைது

கோலாலம்பூர், ஆகஸ்ட் 2 :

சிலாங்கூர், ஜாலான் பாண்டான் இண்டாவிலுள்ள ராஜ் மாஜு உணவகத்தின் முன், இரண்டு மோட்டார் சைக்கிள் குழுக்களுக்கு இடையில் ஏற்பட்ட கைகலப்பு தொடர்பான காணொளி சமூக வலைத்தளங்களில் பெரிதும் பகிரப்பட்டு வருகிறது.

குறித்த சம்பவம் தொடர்பில் நேற்று (01/08/2023) சுமார் 10:56 மணி அளவில், அம்பாங் ஜெயா IPD கட்டுப்பாட்டு மையத்திற்கு பொதுமக்களிடமிருந்து ஒரு தொலைபேசி அழைப்பு வந்ததாகவும், உடனே அவ்விடத்திற்கு போலீசார் அனுப்பப்பட்டதாகவும் அம்பாங் ஜெயா மாவட்ட காவல்துறை தலைவர் கூறினார்.

இந்தக் காணொளியில் உள்ளவர்கள் தொடர்பில் மேற்கொண்ட விசாரணையின் அடிப்படையில், நேற்று 11:00 மணி முதல் இன்று 03:10 மணி வரை 19 முதல் 33 வயதுடைய 8 மலாய் இன ஆண்கள் கைது செய்யப்பட்டதாக அவர் இன்று வெளியிட்டுள்ள ஒரு அறிக்கையில் தெரிவித்தார்.

மேலும் அவர்களிடமிருந்து சம்பவத்தின் போது பயன்படுத்திய ஹெல்மெட் என்பனவும் பறிமுதல் செய்யப்பட்டன.

இரண்டு மோட்டார் சைக்கிள் கிளப் குழுக்களுக்கிடையே ஏற்பட்ட கருத்து வேறுபாடு காரணமாகவே சண்டை ஏற்பட்டதாக விசாரணையில் கண்டறியப்பட்டுள்ளது.

கைது செய்யப்பட்டவர்களில் இருவருக்கு போதைப்பொருள் தொடர்பான முன்னைய குற்றங்களுக்காக கடந்த காலங்களில் தண்டனை பெற்றவர்கள் என்றும், அனைத்து சந்தேக நபர்களும் இன்று அம்பாங் நீதிமன்றத்தில் முற்படுத்தப்பட்டு, எதிர்வரும் 5/8/2023 வரை 4 நாட்களுக்கு விளக்கமறியலில் வைக்க உத்தரவு பெறப்பட்டுள்ளது என்றார்.

இவ்வழக்கு குற்றவியல் சட்டத்தின் 148வது பிரிவின் கீழ் விசாரிக்கப்படும் என்றும், இது குற்றம் நிரூபிக்கப்பட்டால் ஐந்து ஆண்டுகள் வரை சிறைத்தண்டனை அல்லது அபராதம் அல்லது இரண்டும் சேர்த்து தண்டனையாக விதிக்கப்படும்.

வேண்டுமென்றே ஆயுதங்களைப் பயன்படுத்தி, சொத்துக்களுக்கு சேதம் விளைவிக்கும் அளவுக்கு பொறுப்பற்ற செயல்களில் ஈடுபட வேண்டாம் என்று போலீசார் பொதுமக்களுக்கு அறிவுறுத்துவதாகவும் அவர் மேலும் கூறினார்.

https://fb.watch/m9UZ0Vmrhm/?mibextid=cr9u03

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here