மெர்சிங்: ஜாலான் பென்யாபோங், பெலுகர் ஜூலிங்கில், நேற்று, அவர்கள் ஓட்டிச் சென்ற மோட்டார் சைக்கிள் கட்டுப்பாட்டை இழந்து கார் மீது மோதியதில், 15 வயது மாணவி ஒருவர் இறந்தார், அவரது சக தோழி பலத்த காயம் அடைந்தார்.
யமஹா ரக மோட்டார் சைக்கிளில் சென்ற பள்ளி மாணவர்கள் அதிகாலை 2 மணியளவில் விபத்துக்குள்ளானதாக மெர்சிங் மாவட்ட காவல்துறை தலைவர், கண்காணிப்பாளர் அப்துல் ரசாக் அப்துல்லா சானி தெரிவித்தார். பிலியன் ரைடர் எனும் சம்பந்தப்பட்ட மாணவி, கால்கள் மற்றும் உடலில் பலத்த காயங்களுடன் மெர்சிங் மருத்துவமனையில் சேர்க்கப்பட்ட நிலையில், சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். மோட்டார் சைக்கிள் ஓட்டிச் சென்ற 15 வயதுடைய சக பள்ளித் தோழி ஒருவருக்கு காலில் பலத்த காயம் ஏற்பட்டு தற்போது அதே மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருவதாக அவர் குறிப்பிட்டார்.
விசாரணையின் அடிப்படையில், பென்யாபாங் திசையில் இருந்து வந்த மோட்டார் சைக்கிள் ஓட்டுநர், வாகனத்தின் மீது மோதுவதற்கு முன், புரோட்டான் சாகா காரை முந்திச் செல்ல முயன்றபோது விபத்து ஏற்பட்டதாக நம்பப்படுகிறது. இருப்பினும், புரோட்டான் சாகாவின் ஓட்டுநருக்கு காயம் ஏதும் ஏற்படவில்லை என்று அவர் இன்று வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் தெரிவித்துள்ளார். சாலை போக்குவரத்து சட்டம் 1987 பிரிவு 41 (1) இன் கீழ் வழக்கு விசாரிக்கப்படுகிறது.