டிக்டாக் (Tiktok), சமூக வலைத்தளங்களில் சமய சீரழிவு பதிவேற்றங்கள் ; நடவடிக்கை எடுக்கத் தயார் – தங்க கணேசன்

சமயத்திற்கு புறம்பான சம்பவங்களை டிக்டாக் அல்லது சமூக ஊடகங்களில் பகிரப்படுவதை கண்காணித்து வருகிறோம். போலீஸ் புகார் செய்து நீதிமன்ற நடவைக்கையும் எடுக்கவும் தயாராக இருக்கிறோம். அதற்கான ஆய்வுகள் நடைபெற்றுகொண்டிருக்கிறது.  வழக்கறிஞர் குழுவுடன் இதுகுறித்த கருத்துபறிமாற்றங்கள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. இந்து சங்கம் கண்காணிப்பு குழுவையும் கொண்டுள்ளது. இந்த குழுவானத்து வழக்கறிஞர்களுடன் ஆலோசனை மேற்கொண்டு நடவடிக்கைகளில் இறங்குவார்கள் என மலேசிய இந்து சங்கத்தின் தேசியத் தலைவர் சங்கபூசன் தங்க கணேசன் தெரிவித்தார்.

டிக்டாக்கில் இந்து சமய சீரழிவுச் சம்பவங்கள் மலேசிய இந்து சங்கம் எம்சிஎம்சி-யில் புகார் செய்ய வேண்டும் என தொடர்பு இலக்கவியல் அமைச்சர் ஃபாமி ஃ பட்ஸில் கூறியிருந்தார். மேலும், மதுபானத்தை ‘ஐயா மதுபானம்’ என்றும் சைவ மதுபானம் என்றும் சில தரப்புகளால் சொல்லப்படுவதாக அறியப்படும் வேளையில் இதுகுறித்து மலேசிய இந்து சங்கத்தின் பேராக் மாநில 45 ஆவது திருமுறை விழாவின்போது தங்க கணேசன் அவர்களுடன் மக்கள் ஓசை முகநூல் நேரலையின் வழி நேர்காணலை மேற்கொண்டிருந்தது.

நமது சமயத்தை நாமே சீரழித்துக் கொண்டிருக்கிறோம் என்பதை சமுதாயம் உணர வேண்டும். தங்களை விளம்பரப்படுத்திக் கொள்வதற்கு வாட்சாப், முகநூல் அல்லது டிக்டோக் போன்ற சமூக வலைத்தளங்களில் சமய சீர்கேடு காட்சிகளை உடனே பதிவேற்றம் செய்வதோடு பகிரவும் செய்கின்றனர்.  தங்களின் பதிவிற்கு அதிக விருப்பங்கள் (லைக்குகள்) கிடைக்க வேண்டும் என்பதற்காகவும் தங்களின் பதிவு ஈர்க்கப்படவேண்டும் என்பதற்காகவும் இப்படி செயல்படுகின்றனர். இதன்மூலமாக சமய சீர்கேடுகளை மற்ற இனத்தவரையும் பார்க்கச்செய்கிறோம், தவறான வழிகாட்டலை காண்பிக்கின்றோம் என்பதை மறந்து விடுகின்றனர்.

சமயத்திற்கு முரணான ஒரு சம்பவத்தை நேரில் பார்த்தால் அல்லது அது குறித்த தகவல் தெரிந்தால் உடனடியாக அதனை தேசிய இந்து சங்கம், மாநிலம் அல்லது அருகாமையிலேயே இருக்கும் வட்டார இந்து சங்க பொறுப்பாளர்களிடம், ஆலய நிர்வாகம், சமய அமைப்புகளிடம் கொண்டு சேர்க்க வேண்டும். அதற்கான நடவடிக்கையை எடுக்க நாங்கள் தயாராக இருக்கின்றோம். அமைச்சர் கூறியது போல நிச்சயமாக தகவலை அமைச்சுக்கு கொண்டு சேர்ப்போம் என்பதுடன் ஏற்கனவே பல புகார்களை கொண்டு சேர்த்துள்ளோம், போலீஸ் புகார்களையும் செய்துள்ளோம் என்பதையும் தெரிவித்துக்கொள்கிறோம் என அவர் கூறினார்.

அண்மையில்கூட ஆலய இரதத்தின் முன்னே ஆட்டை பலிகொடுக்கும் சம்பவம் நிகழ்ந்திருக்கிறது. இது தவிர்க்கப்பட வேண்டிய ஒன்று. மூவின மக்கள் வாழும் நாட்டில் நமது செயல் எந்த அளவிற்கு நமது சமயத்தை எடுத்துக்காட்டப்போகிறது என்பதை உணர்ந்து ஒரு செயலை செய்ய வேண்டும். இதுபோன்ற காரியங்களை சமூக வலைத்தளங்களில் பதிவேற்றம் செய்வதற்கு முன்னதாக ஒரு முறை யோசித்து பார்க்க வேண்டும். சேர்க்க வேண்டிய இடத்தில் சேர்க்க வேண்டும். இதன் மூலமாக  தக்க நடவடிக்கைக்கு நீங்களும் கைகொடுக்க முடியும் என்பதோடு  தவறான பின்பற்றல்களை அடுத்த சமயத்தினருக்கு கொண்டு சேர்ப்பதையும் தவிர்க்கலாம்.     

‘ஐயா பானம்’ எனச்சொல்லி இப்பொழுது விளம்பரப்படுத்தத் தொடங்கியுள்ளனர். போதை தருகின்ற எந்த பானமாக இருந்தாலும் கண்டிப்பாக ஏற்றுக்கொள்ள முடியாது. சிறுதெய்வ வழிபாட்டில் அவர்கள் அதை கடைபிடித்து வந்தாலும், ஒருசில தரப்பு அதை ‘ஐயா பானம்’ என்று புதிய யுக்தியை பயன்படுத்தி விளம்பரப்படுத்துகின்றனர். சமய அடிப்படையில் பார்க்கும் பொழுது கட்டாயம் தவிர்க்க வேண்டிய ஒன்றாக இருப்பதனால் சம்பந்தப்பட்ட நிறுவனத்தார்களிடம் தவிர்த்துவிடும்படி  வலியுறுத்தி வருகின்றோம்.

மக்களிடையே குழப்பத்தை ஏற்படுத்துவதால் தொலைகாட்சி, வானொலி, சமூக ஊடகங்கள் போன்றவரிடம் இது சம்பந்தப்பட்ட பானம் குறித்த விளம்பரத்தை வெளியிடக்கூடாது என்றும் கேட்டுக்கொள்கிறோம். அதுபோக, சமீப காலமாக சிவலிங்கத்தை கல்லறையில் பிரதிஷ்டை செய்கிறார்கள். முற்றும் துறந்த முனிவர்களுக்கு மட்டுமே சகல பூஜைகளும் செய்து பிரதிஷ்டை செய்வார்கள் என்பது அய்தீகம். இந்துக்கள் இதுபோன்ற விசயங்களை செய்யும் முன் ஆலயங்கள் அல்லது இந்து சங்கத்திடம் ஆலோசனை கேட்டு முடிவெடுக்க வேண்டும் என்று கேட்டுக்கொள்கிறோம் எனவும் தங்க கணேசன் குறிப்பிட்டார்.

இளைய சமுதாயத்தினரிடையே இருக்கின்ற பிரச்சனைகளைக் களைவதற்கு தமிழ்ப்பள்ளிகளில் கட்டாயம் சமய பாட திட்டத்தை கொண்டு வரவேண்டும் என்பதை அரசாங்கத்திடம் வலியுறுத்துகிறோம். சமய பாடம் ஒன்று மட்டுமே  நம்முடைய சமுதாயத்தை நல்வழிப்படுத்தக்கூடிய சாத்தியங்களை அதிகம் கொண்டிருக்கிறது. தேர்தல் காலங்களில் மட்டும் எங்களை பயன்படுத்திக்கொள்ளாமல் எங்களின் இதுபோன்ற எதிர்ப்பார்ப்புகளையும் கவனத்தில் கொள்ள வேண்டும், செவி சாய்க்க வேண்டும் என பிரதமரையும் கல்வி அமைச்சையும் கேட்டுக்கொள்கிறோம் என்றும்  அவர் பேசினார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here