பகுதிநேர ஊடகப் பணியாளர்களுக்கு சொக்சோ பாதுகாப்பு

பத்திரிகைத் துறையைப் பாதுகாப்பதற்கு
புதிய திட்டம் ; ஃபாமி தகவல்

பிரதமர் டத்தோஸ்ரீ அன்வார் இப்ராஹிம் தலைமையிலான ஒற்றுமை அரசாங்கம் மத்திய அரசாங்கத்தைத் தொடங்கிய இந்த 8 மாதங்களில் அரசாங்கத்தின் சாதனைகளும் நாட்டின் மேம்பாட்டிற்கான திட்டங்களும் சரியான பாதையில் பயணிக்கத் தொடங்கி இருக்கின்றன. நாட்டின் பணவீக்க விகிதம் குறைந்திருப்பதோடு ரிங்கிட்டின் மதிப்பும் பலமடைந்து வருகிறது. இது ரிங்கிட்டின் மதிப்பு உயர்வைக் காட்டுவதாக உள்ளது என்று தொடர்பு, இலக்கவியல் அமைச்ங்ர் அமாட் ஃபாமி முகமட் ஃபட்ஸில் கூறினார்.

மக்கள் ஓசை உடனான பிரத்தியேக சந்திப்பில் பேசிய அவர், கடந்த 4 மாதங்களில் வேலையின்மைப் பிரச்சினைக்குத் தீர்வு காணப்பட்டு முழு அளவில் வேலை வாய்ப்புகள் வழங்கப்பட்டிருக்கின்றன என்று சொன்னார். 2022ஆம் ஆண்டோடு ஒப்பிடுகையில் மலேசியாவில் தற்போது உலக நாடுகளுடன் போட்டி தரக்கூடிய மனித ஆற்றல் உருவாக்கப்பட்டிருக்கிறது. திறன்மிக்க தொழிலாளர்கள் எண்ணிக்கையும் அதிகரித்திருக்கிறது. முறையான பயிற்சிகளும் திறன் மேம்பாடுகளும் மிகுந்த பலனைத் தந்திருக்கின்றன என்று அவர் சொன்னார்.

பொருளாதாரத் துறையைப் பொறுத்தவரை மலேசிய மடானி கோட்பாடு மிகப்பெரிய வளர்ச்சியை நோக்கி பொருளாதார வளர்ச்சியில் பயணிக்கத் தொடங்கி இருக்கிறது. சரியான பாதையில் நாடு செல்கிறது என்பதற்கு இதுவே நல்ல அறிகுறியாகவும் இருக்கிறது.
தொழில்நுட்பம், செமிகொன்டாக்டர், சிப்ஸ் போன்ற துறைகளில் மிகப்பெரிய வளர்ச்சியை நோக்கி மலேசியா தற்போது பயணித்துக் கொண்டிருக்கிறது.
மலேசியாவின் இந்த ஆக்கப்பூர்வமான இலக்கு நாட்டின் நிகர உள்நாட்டு உற்பத்தி 6.5 விழுக்காடாக உயர்வு காண்பதற்கு வழி வகுத்திருக்கிறது. சீனாவுடன் ஒப்பிடுகையில் அதன் வளர்ச்சிக்கு ஈடாக மலேசியாவின் வளர்ச்சி இருக்கிறது என்று அவர் தெரிவித்தார்.

மலேசியாவில் தெஸ்லா

உலகின் மிகப்பெரிய மின்சார வாகன உற்பத்தி நிறுவனமான தெஸ்லா மலேசியாவில் தடம் பதித்திருப்பது மலேசியாவின் பொருளாதாரத்திற்கு மிகப்பெரிய உத்வேகத்தைத் தந்திருக்கிறது. புதுப்பிக்கும் எரிசக்தி, அந்நிய முதலீடு, வேலை வாய்ப்பு என அனைத்துத் துறைகளிலும் ஒரு புதிய மறுமலர்ச்சியை தெஸ்லாவின் வருகை ஏற்படுத்தும். இந்நிறுவனத்தின் உரிமையாளரும் மிகப்பெரிய கோடீஸ்வரருமான எலன் மாஸ்க் அண்மையில் நாட்டிற்கு வருகை புரிந்து மலேசியப் பிரதமர் டத்தோஸ்ரீ அன்வாருடன் பேச்சசுவார்த்தை நடத்தி இருப்பது மலேசியாவின் அரசியல் நிலைத்தன்மை, ஒற்றுமை அரசாங்கத்தின் மீதான நம்பிக்கை ஆகியவற்றை வலுப்பெறச் செய்திருக்கிறது.

தரவு சேகரிப்பு மையங்களை அமைப்பதிலும் அரசாங்கம் தீவிரம் காட்டி வருகிறது. தெனாகா நேஷனல் பெர்ஹாட் (டிஎன்பி) தரவு சேகரிப்பு மையத்தை அமைப்பதற்கு மனு சய்திருக்கிறது. மேலும் 50 விண்ணப்பங்களும் இன்னும் பரிசீலனையில் உள்ளன. பசுமை எரிசக்தியின் கொள்கைக்கு ஏற்ப நாட்டின் தேசிய எண்ணெய் நிறுவனமான பெட்ரோனாஸ் புதுப்பிக்கும் எரிசக்தித் துறைக்கு மாறி வருகிறது. இது முற்றிலும் புத்தாக்கத் தொழில்துறையைச் சார்ந்தவையாகும் என்று ஃபாமி குறிப்பிட்டார்.

வெற்றிப் பாதையில் பயணம்

நாட்டில் 5ஜி மேம்பாடு பற்றி குறிப்பிட்ட அவர், நாட்டில் செயல்படும் அனைத்து தொலைபேசி நிறுவனங்களுடன் (தெல்கோஸ்) ஒப்பந்தம் செய்து கொள்வதில் வெற்றி பெற்றிருக்கிறோம் என்று சொன்னார்.  கடந்த அரசாங்கத்தில் இத்துறை அமைச்சர் இந்த ஒப்பந்தத்தில் கையொப்பமிடுவதில் தோல்வி கண்டிருக்கிறார். ஆனால் ஒற்றுமை அரசாங்கம் இதில் மிகப்பெரிய ஒரு சாதனையைப் படைத்திருக்கிறது. 5ஜி திட்டம் கிட்டத்தட்ட 64.2 விழுக்காடு தற்போது பயனீட்டில் இருக்கிறது. உலகளவில் மலேசியாவின் சாதனை இதில் முத்திரை பதித்திருக்கிறது.

அண்மைக் காலமாக கைத்தொலைபேசி பயனீட்டில் இடையூறு ஏற்பட்டிருப்பதை ஒப்புக்கொண்ட அமைச்ங்ர், சிம் கார்டை மாற்ற வேண்டிய அவசியமில்லை. ஆனால் 5ஜி பயனீட்டுக்கு ஈடாக கைத்தொலைபேசியை மாற்ற வேண்டிய அவசியம் உள்ளது என்று சொன்னார்.

பகுதி நேர தகவல் ஊடகப் பணியாளர்களுக்கு சொக்சோ திட்டம்

ஊடகத்துறையில் பகுதி நேரமாகப் பணியாற்றுகின்றவர்களுக்கு சொக்சோ, இபிஎப் அனுகூலங்களைப் பெறும் வகையில் அவர்களை அதில் பதிவு செய்யும் நடவடிக்கையை அமைச்சு விரைவில் முன்னெடுக்கும். இது இந்தப் பகுதி நேர ஊடகப் பணியாளர்களுக்கு பாதுகாப்பை வழங்கக்கூடியதாக இருக்கும்.  இவர்களின் தேவைகளை நிறைவு செய்யும் வகையில் இவர்களுக்கு உதவக்கூடிய திட்டங்களை ஒற்றுமை அரசாங்கம் தற்போது வகுத்து வருகிறது என்று ஃபாமி குறிப்பிட்டார்.

அதே சமயத்தில் பத்திரிகைத் துறைகளைப் பாதுகாக்கும் நடவடிக்கைகளும் முன்னெடுக்கப்படும். அதற்குரிய திட்டங்கள் தற்போது வகுக்கப்பட்டு வருகின்றன. விரைவில் அதற்குரிய அறிவிப்புகள் வெளியிடப்படும் என்று தொடர்பு, இலக்கவியல் அமைச்சர் ஃபாமி இந்தச் சந்திப்பில் குறிப்பிட்டார்.

பி.ஆர். ராஜன் – படம்: தி. மோகன்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here