பிளாஸ்ட்டிக் பையில் கண்டெடுக்கப்பட்ட உடல்: துரைராஜ் என்பவருக்கு போலீஸ் வலைவீச்சு

 

செர்டாங், ஆகஸ்ட்டு 16:

கடந்த ஆகஸ்ட் 4 ஆம் தேதி, இங்குள்ள தாமான் புக்கிட் செர்டாங்கில் உள்ள ஒரு பழைய இரும்புகள் சேகரிக்கும் கடை வளாகத்தில் பிளாஸ்டிக் பையில் சடலமாக கண்டெடுக்கப்பட்ட கணக்கு குமாஸ்தா ஒருவரது மரணத்தில் தொடர்புடையதாகக் கருதப்படும் ஒருவரை போலீசார் கண்காணித்து வருகின்றனர்.

43 வயதான தம்பி சாய் என அழைக்கப்படும் எஸ் துரைராஜ் என்பவரையே போலீசார் கண்காணித்து வருகின்றனர் என்றும், “அந்த நபரின் கடைசி முகவரி எண் 03-11 ருசேலியா அபார்ட்மென்ட், தாமான் பிங்கிரான் புத்ரா, ஸ்ரீ கெம்பாங்கான், சிலாங்கூர் என்றும், செர்டாங் மாவட்ட காவல்துறை தலைவர் துணை ஆணையர் ஏ ஏ அன்பழகன் கூறினார்.

தம்பி சாய் என அழைக்கப்படும் எஸ் துரைராஜ்

“சம்பவம் தொடர்பான தகவல் தெரிந்தவர்கள், வழக்கின் விசாரணை அதிகாரி, துணை கண்காணிப்பாளர் ரோசைரிபின் அப்துல் உத்மானை 011-11228545 என்ற எண்ணில் தொடர்பு கொள்ளுமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள்” என்று அவர் நேற்று வெளியிட்டுள்ள ஒரு அறிக்கையில் தெரிவித்துள்ளார்.

முன்னதாக, ஸ்கிராப் மெட்டல் நிறுவனத்தில் பணிபுரிந்த 41 வயது இந்தியரின் மரணம், அவரது உடல் முழுவதும் பலமான, மழுங்கிய பொருளால் தாக்கப்பட்டதால் நிகழ்ந்தது எனக் கூறப்பட்டது.

அதைத் தொடர்ந்து, குறித்த கொலை தொடர்பான விசாரணையில் உதவுவதற்காக ஆகஸ்ட் 5 ஆம் தேதி கிள்ளான் பள்ளத்தாக்கைச் சுற்றி மூன்று பெண்கள் உட்பட 13 நபர்களை போலீசார் கைது செய்தனர்.

இருப்பினும், பாதிக்கப்பட்டவரின் முதலாளியின் குடும்ப உறுப்பினர்களான மூன்று பெண் சந்தேக நபர்களின் வாக்குமூலங்கள் பதிவு செய்யப்பட்ட பின்னர், அவர்கள் நேற்று விடுவிக்கப்பட்டதாக அன்பழகன் மேற்கோள் காட்டினார்.

20 முதல் 58 வயதுக்குட்பட்ட ஏனைய 10 சந்தேக நபர்களும் பாதிக்கப்பட்டவரின் முதலாளி (முக்கிய சந்தேக நபர்) அவரது குடும்ப உறுப்பினர்கள் மற்றும் நண்பர்களாவர். அவர்களில் மூவர் இன்று பெட்டாலிங் ஜெயா மாவட்ட நீதிமன்றில் முன்னிலைப்படுத்தப்படவுள்ளனர் என்று அவர் அவ்வறிக்கையில் தெரிவித்தார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here