ஷா ஆலாம் செக்ஸன் 14, மலைப் பாங்கான வனப்பகுதியில் தீ விபத்து; தீயை அணைக்க தீயணைப்பு துறையினர் தீவிர நடவடிக்கை!

கோலாலம்பூர்:

சிலாங்கூர், ஷா ஆலாம் செக்ஸன் 14 பகுதியில் அமைந்துள்ள சுல்தான் சலாவுடின் அப்துல் அஸிஸ் ஷா மசூதிக்கு அருகில் உள்ள 2.5 ஹெக்டேர் மலை பாங்கான வனப்பகுதியில் நேற்று பிற்பகலில் திடீர் தீ விபத்து ஏற்பட்டுள்ளது.

சிலாங்கூர் தீயணைப்பு, மீட்பு துறையின் செயல்பாட்டுப் பிரிவு உதவி இயக்குநர் அஷ்ருல் ரீசால் அஸ்பார் வெளியிட்ட தகவலின்படி, மதியம் ஒரு மணியளவில் அவசர அழைப்பு கிடைக்க பெறப்பட்டதைத் தொடர்ந்து ஷா ஆலாம் தீயணைப்பு நிலையத்தைச் சேர்ந்த தீயணைப்பு வீரர்கள் உடனடியாக சம்பவ இடத்திற்கு விரைந்துள்ளனர்.

இந்த தீ சம்பவத்தால் அருகிலுள்ள கட்டடங்களுக்கு எந்தவித சேதமும் ஏற்படவில்லை என்றும், யாருக்கும் காயங்கள் அல்லது உயிர்ச்சேதம் எதுவும் பதிவு செய்யப்படவில்லை என்றும் அவர் தெரிவித்தார்.

தீயணைப்பு வீரர்கள் தீயைக் கட்டுப்படுத்தத் தீவிர நடவடிக்கைகளில் ஈடுபட்டு வருவதுடன், தீ மேலும் பரவாமல் இருக்கச் செயற்கை இடைவெளிகளை உருவாக்கித் தொடர்ந்து போராடினர்.

சிலாங்கூர் இஸ்லாமிய மத வாரியத்தின் தீ அணைப்புக் குழாய்கள் மற்றும் நீர் லாரிகளின் உதவியுடன் எஞ்சிய தீப்பிழம்புகளை அணைக்கும் பணி இரவு வரை தீவிரமாக நடைபெற்று வந்ததாகவும், நிலைமை முழுமையாகக் கட்டுப்பாட்டிற்குள் கொண்டுவரப்படும் எனவும் தெரிவிக்கப்பட்டிருந்தது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here