குர்ஆன் எரிக்கப்படுவதற்குத் தடை விதிக்கும் டென்மார்க்

சமய பொருள்கள் தவறாக நடத்தப்படுவது குற்றமாகும் என்று டென்மார்க் அரசாங்கம் வெள்ளிக்கிழமை தெரிவித்தது.

முஸ்லிம்களின் சமய வேதமான திருக்குர்ஆன் பொதுவெளியில் எரிக்கப்பட்ட சம்பவங்களால். பல்வேறு முஸ்லிம் பெரும்பான்மை நாடுகளில் கொந்தளிப்பு ஏற்பட்டதைத் தொடர்ந்து டென்மார்க் அரசாங்கம் இந்த அறிவிப்பை வெளியிட்டுள்ளது.

சமய முக்கியத்துவம் கொண்ட பொருளைத் தவறாக நடத்திய குற்றம் நிரூபிக்கப்பட்டால், ஒருவருக்கு ஈராண்டு வரை சிறைத் தண்டனை அல்லது அபராதம் விதிக்கப்படலாம் என்று டென்மார்க்கின் நீதித்துறை அமைச்சு முன்மொழிந்த மசோதா வரைவில் குறிப்பிடப்பட்டுள்ளது.

இந்த மசோதாவுக்கு நாடாளுமன்றத்தில் ஒப்புதல் வழங்கப்பட்டால், ஆண்டிறுதிக்குள் இது சட்டமாக்கப்படலாம் என்று டென்மார்க் அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

டென்மார்க்கும் அண்டை நாடான சுவீடனும் கருத்து சுதந்திரத்தில் சமநிலை கடைப்பிடிக்கப்படுவதை உறுதிசெய்வதில் தடுமாறி வருகின்றன. அண்மைய மாதங்களாக பயங்கரவாதத் தாக்குதல் ஏற்படுவதற்கான சாத்தியம் அதிகரித்துள்ளதாக இவ்விரு நாடுகளும் கூறியுள்ளன.

குர்ஆன் எரிக்கப்பட்டதற்கு பல முஸ்லிம் பெரும்பான்மை நாடுகளின் அரசாங்கங்கள் கடும் கண்டனங்களைத் தெரிவித்துள்ளன.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here