மாலத்தீவில் இருந்து வெளியேற தொடங்கிய இந்திய ராணுவம்.. அப்போ இந்தியா அளித்த ஹெலிகாப்டர்கள் என்னவாகும்

மாலத்தீவு: இந்தியாவுக்கும் மாலத்தீவுக்கும் இடையேயான நல்லுறவு பாதிக்கப்பட்டுள்ள நிலையில், அங்கிருந்த முதல் பேட்ஜ் இந்திய ராணுவத்தினர் இந்தியா திரும்பியுள்ளதாகத் தகவல் வெளியாகியுள்ளது. இந்தியாவுக்கும் மாலத்தீவுக்கும் இடையே கடந்த சில காலமாகவே மோதல் போக்கு நிலவி வருகிறது. குறிப்பாக அங்கே அதிபராக முய்ஸு பதவியேற்ற பிறகு, அங்குள்ள இந்திய வீரர்கள் உடனடியாக வெளியேற வேண்டும் என்பதை அவர் தொடர்ந்து வலியுறுத்தி வந்தார்.

வெளியேறிய ராணுவ வீரர்கள்: இதற்கிடையே மாலத்தீவில் இருந்த இந்திய ராணுவ வீரர்களின் முதல் பேட்ஜ் இப்போது அங்கிருந்து வெளியேறி உள்ளனர். மாலத்தீவுக்கு இந்தியா அளித்த ஹெலிகாப்டர்களை கையாளவே அவர்கள் அங்கே இருந்தனர். இந்தச் சூழலில் தான் அவர்கள் ஹெலிகாப்டரின் செயல்பாடுகளை இந்திய சிவில் குழுவினரிடம் ஒப்படைத்த பின்னர். மாலத்தீவில் இருந்து கிளம்பியுள்ளதாக அந்நாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. இது தொடர்பாக மாலத்தீவு தேசியப் பாதுகாப்புப் படையின் அதிகாரி ஒருவர் கூறுகையில், “அட்டு நகரில் இருந்த சுமார் 25 இந்திய வீரர்கள், ஹெலிகாப்டரின் செயல்பாடுகளை இந்திய சிவில் குழுவினரிடம் ஒப்படைத்த பின்னர், அங்கிருந்து இந்தியா திரும்பியுள்ளனர்” என்றார். அதேநேரம் மாலத்தீவில் இருந்து இந்திய ராணுவ வீரர்கள் திரும்ப வந்தது குறித்த தகவலைப் பாதுகாப்பு அமைச்சகம் உறுதி செய்யவில்லை.

பாதுகாப்புப் படை அதிகாரி: மாலத்தீவு தேசியப் பாதுகாப்புப் படையின் அதிகாரி மேலும் கூறுகையில், “இரு தரப்பும் ஒப்புக்கொண்டது படி இந்திய ராணுவ வீரர்கள் வெளியேறியுள்ளனர். மாலத்தீவு இந்தியாவுக்கு அளித்த ஹெலிகாப்டர்களை இனி இந்தியாவின் சிவில் வல்லுநர்கள் இயக்குவார்கள்” என்றார்.. இன்னும் இரண்டு பேட்ஜ் இந்திய வீரர்கள் மாலத்தீவில் இருக்கும் நிலையில், அவர்கள் மே 10ஆம் தேதிக்குள் அங்கிருந்து இந்தியா திரும்புவார்கள் என்று அந்த அதிகாரி மேலும் தெரிவித்தார். தீவுகள் கூட்டமான மாலத்தீவில் ஒரு தீவில் இருந்து மற்றொரு தீவுக்கு உடனடியாக செல்வது சிரமம். யாருக்காவது உடல்நிலை பாதிப்பு ஏற்பட்டு இருந்தால் அவர்களை மருத்துவமனை இருக்கும் தீவுக்கு அழைத்துச் செல்வதில் முதலில் சிரமம் இருந்தது. இதற்கு உதவவே இந்தியா இந்த ஹெலிகாப்டர்களை வழங்கி இருந்தது. அதை ஆப்ரேட் செய்யவும் பராமரிக்கவும் தான் இந்திய வீரர்கள் அங்கே இருந்தனர்.  ஆனால், அவர்கள் தான் உடனடியாக வெளியேற வேண்டும் என்றார் முய்ஸு.

முய்ஸு அடாவடி: முய்ஸு பொதுவாகச் சீன ஆதரவு நிலைப்பாடு கொண்டவராக அறியப்படுகிறார். அவர் தேர்தல் சமயத்திலேயே இந்தியர்களை வெளியேற்றுவேன் என்பதை முன்னிறுத்தி பிரச்சாரம் செய்திருந்தார். பொதுவாக மாலத்தீவில் புதிதாக அதிபராகப் பதவியேற்போர் முதலில் இந்தியாவுக்குத் தான் வருவார்கள். ஆனால், அந்த பாரம்பரியத்தை மாற்றி முய்ஸூ முதலில் துருக்கிக்கும் சீனாவுக்கும் சென்றது குறிப்பிடத்தக்கது. மேலும் முய்ஸு மாலத்தீவில் இந்திய சிவில் குழு இருக்கவும் கடும் எதிர்ப்பு தெரிவித்திருந்தார். இது தொடர்பாக அவர் கூறுகையில், “இந்தியா இப்போது என்ன செய்ய முயல்கிறது என்பது புரிகிறது. அவர்கள் ராணுவ யூனிபார்மை சிவிலியன் உடையாக மாற்றிவிட்டுத் திரும்ப முயல்கிறார்கள். அதை நாங்கள் ஏற்கவே மாட்டோம். மே 10 தான் அவர்களுக்கு டைம். அதன் பிறகு மாலத்தீவில் இந்தியர்கள் யாரும் இருக்க மாட்டார்கள். ராணுவ சீருடை, சிவில் உடை என எதுவாக இருந்தாலும் இதுதான் எங்கள் நிலைப்பாடு” என்றார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here