கோலாலம்பூர்:
கடந்த ஆகஸ்ட் 21-ம் தேதி மஇகா கட்சியின் அடிக்கல் நாட்டு விழாவில் நடத்தப்பட்ட பல இன, சமய பிரார்த்தனையில் கிரிமினல் குற்றங்கள் எதுவும் இல்லை என்று காவல்துறை கண்டறிந்துள்ளது.
தலைநகரில் நடைபெற்ற இந்திய நிகழ்வில் ஒரு முஸ்லீம் நபர் துவா ஓதுவது போன்ற வைரலான வீடியோ சமீபத்தில் மக்கள் ஓசையின் பேஸ்புக்கில் நேரலையாக ஒளிபரப்பப்பட்டது, அவ்வீடியோ தொடர்பாக எந்த குற்றவியல் அல்லது சிவில் குற்றமும் இல்லை என்று, புதிதாக பதவி உயர்வு பெற்ற புக்கிட் அமான் குற்றப் புலனாய்வுத் துறையின் இயக்குநர் டத்தோஸ்ரீ முகமட் ஷுஹைலி முகமட் ஜைன் கூறினார்.
“இதுவரை, குற்றத்தின் கூறுகள் எதுவும் இல்லை, மேலும் இது ஒரு மதப் பிரச்சினை, எனவே ஜாவி இந்த விஷயத்தைத் தொடரும்” என்று அவர் கூறினார்.
இந்த சம்பவம் குறித்து, கூட்டாட்சி பிரதேச இஸ்லாமிய மதத் துறை (JAWI) ஏற்கனவே விசாரணையைத் தொடங்கி விட்டதாக அவர் கூறினார்.
முன்னதாக ஜாவி வெளியிட்டுள்ள ஒரு அறிக்கையில், முஸ்லீம் அல்லாத நிகழ்வில் துவா ஓதும் நடைமுறை இஸ்லாம் போதனையை பிரதிபலிக்கவில்லை என்று தெரிவித்தது. ஆனாலும் இந்தச் செயல் ஃபத்வாவை மீறும் என்று அது கூறியது.
மத நம்பிக்கைகள் மற்றும் இஸ்லாம் நம்பிக்கை தொடர்பான எந்தவொரு குற்றமும் ஷரியா குற்றவியல் குற்றச் சட்டம் (கூட்டாட்சிப் பகுதிகள்) 1997 சட்டத்தின் 559 இன் கீழ் சட்ட நடவடிக்கைக்கு உட்படுத்தப்படலாம் என்றும் அது கூறியது குறிப்பிடத்தக்கது.




















